கடலுார் அரசு மருத்துவமனையில் மின் தடையால் நோயாளிகள் அவதி
கடலுார் அரசு மருத்துவமனையில் மின் தடையால் நோயாளிகள் அவதி
ADDED : மார் 21, 2026 11:30 PM

கடலுார்: கடலார் அரசு மருத்துவமனையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகள் அவதியடைந்தனர்.
கடலுார் மஞ்சக்குப்பத்தில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினசரி ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். நேற்று மாலை 6:00 மணியளவில், அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பொது வார்டில் மின்தடை ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் அவதியடைந்தனர். பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்களும் மொபைல் போன் வெளிச்சத்தை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்தது.
அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், அவசர சிகிச்சை பிரிவு அருகே பள்ளம் தோண்டும்போது மின் ஒயர் துண்டிக்கப்பட்டதால், மின்தடை ஏற்பட்டது தெரியவந்தது. மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இரவு 8:00 மணியளவில் சீரமைக்கப்பட்டது.

