ஆணாதிக்க மனோபாவம் மறைய வேண்டும்; மகளிர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
ஆணாதிக்க மனோபாவம் மறைய வேண்டும்; மகளிர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
ADDED : மார் 08, 2025 02:09 PM

சென்னை: 'ஆண் ஆதிக்க மனோபாவம் மறைய வேண்டும். பெண்களை கேலி பேசுவதும், அவர்களின் வளர்ச்சியை கொச்சை படுத்துவதும் இருக்கவே கூடாது' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மகளிர் தின கொண்டாட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நாளும் கிழமையும் நலிந்தோருக்கில்லை; ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லை என்பார்கள். இல்லத்தை மட்டுமின்றி உலகத்தையே இயங்கச் செய்யும் மகளிர் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள். சமூகத்தில் சரி பாதியான மகளிருக்கான நாள் இது.
பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை என்பதை உணர்ந்த ஆண்கள் நாங்கள். தி.மு.க.,வின் அடிப்படை நோக்கமே ரத்த பேதம், பால் பேதம் இல்லை என்பதாகும். இதுவே முழுமையான சமூக நீதி. தி.மு.க., ஆட்சியில் விடியல் பெண் உள்ளிட்ட ஏராளமான திட்டத்தில் பெண்களை பங்கு பெற வைத்து இருக்கிறோம்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தை திருமணத்தை தடுத்து, அவர்களை பாதுகாக்க பால் இன மையங்கள் உருவாக்கி இருக்கிறோம். புதிதாக காஞ்சிபுரம், ஈரோடு, தர்மபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் புதிய தோழி விடுதிகள் அமையும். மகளிர் உயர மாநிலம் உயரும்.
எல்லா துறைகளிலும் பெண்கள் தான் இருக்கிறீர்கள். தடைகளை தாண்டி சாதிக்கும் உங்களை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்! நான் முதல்வராக அனைத்து மக்களுக்கு வைக்க கூடிய கோரிக்கை, ஆண் ஆதிக்க மனோபாவம் மறைய வேண்டும். பெண்கள் நமக்காக தியாகம் செய்ய பிறக்கவில்லை. அவங்களும் நம்மை போலவே எல்லா உரிமைகளும் கொண்ட சக மனிதர் என்ற எண்ணம் எல்லோருக்கும் தோன்ற வேண்டும்.
அரசியலில் வேலை பார்க்கும் பெண்கள் உட்பட எல்லா இடத்திலும் அவர்களுக்கு உரிய மரியாதையும், பாதுகாப்பும் வழங்க வேண்டும். கேலி பேசுவதும், அவர்களின் வளர்ச்சியை கொச்சை படுத்துவதும் இருக்கவே கூடாது. இது தான் உண்மையான சமுதாய சிந்தனை வளர்ச்சி. இதை எல்லோரும் கடை பிடிக்க வேண்டும். ஆண்கள் எங்களையும் கவனிங்க என்று கேட்க கூடிய வகையில் செயல்படுகிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.