யாரைச்சொன்னார் பவன் கல்யாண்; 'தெரியலையே' என்கிறார் உதயநிதி!
யாரைச்சொன்னார் பவன் கல்யாண்; 'தெரியலையே' என்கிறார் உதயநிதி!
UPDATED : அக் 04, 2024 12:47 PM
ADDED : அக் 04, 2024 12:39 PM

சென்னை: 'சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்' என்று கூறிய ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பற்றி தமிழக துணை முதல்வர் உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். 'யாருக்கு சொல்லிருக்கார் என்று தெரியவில்லையே' என்று முதலில் கூறியவர், ஒரு சில வினாடிகள் கழித்து, 'லெட்ஸ் வெயிட் அண்ட் ஸீ' என்று கூறிவிட்டு காரில் சென்றார்.
கடந்த ஆண்டு செப்., மாதம், ' மலேரியா, டெங்கு நோய்கள் போல், சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் ' என உதயநிதி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. உதயநிதிக்கு எதிராக, பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த சூழலில், துணை முதல்வர் உதயநிதியை, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மறைமுகமாக சாடி பேசினார்.
'அண்டை மாநிலத்தை சேர்ந்த இளம் தலைவர் ஒருவர், வைரஸ் போன்ற சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்றார். சனாதனத்தை தர்மத்தை அழிப்பேன் என்று கூறுபவர்கள் தான் அழிந்து போவார்கள்' என பவன் கல்யாண் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. உதயநிதி தான் சனதானம் குறித்து பேசியிருந்தார். அவருக்கு தான் பவன் கல்யாண் சரியான பதிலடி கொடுத்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் அனல் பறந்தது.
ஒரு வரி பதில்!
இந்நிலையில் சென்னையில் இன்று (அக்.,04) உதயநிதியிடம் நிருபர்கள், சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்' என்று கூறிய ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பற்றி கேள்வி எழுப்பினர். 'யாருக்கு சொல்லிருக்கார் என்று தெரியவில்லையே' என்று முதலில் கூறியவர், ஒரு சில வினாடிகள் கழித்து, 'லெட்ஸ் வெயிட் அண்ட் ஸீ' என்று கூறிவிட்டு நழுவிய உதயநிதி காரில் புறப்பட்டு சென்றார்.