உடை மாற்றுவதை படம் பிடித்ததால் உதவியாளரை கொன்று கூவத்தில் வீசிய பவன் கல்யாண் கட்சி பெண்
உடை மாற்றுவதை படம் பிடித்ததால் உதவியாளரை கொன்று கூவத்தில் வீசிய பவன் கல்யாண் கட்சி பெண்
ADDED : ஜூலை 13, 2025 04:28 AM

சென்னை: ஆந்திராவில், பவன் கல்யாண் கட்சியின் பெண் நிர்வாகி, படுக்கை அறையில் உடை மாற்றும் காட்சியை படம் பிடித்த உதவியாளரை, கொலை செய்து சென்னையில் கூவம் ஆற்றில் வீசிய கொடூரம் நடந்துள்ளது. இது தொடர்பாக, ஜனசேனா கட்சியின் பெண் நிர்வாகி உட்பட, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசலு, 22; இவர், ரேணிகுண்டாவைச் சேர்ந்த நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி காளஹஸ்தி தொகுதி பொறுப்பாளரான வினுதா கோட்டா, 31, என்பவரிடம், கார் ஓட்டுநராக 2019ல் இருந்து பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், சென்னை, வால்டாக்ஸ் சாலை கூவம் ஆற்றில் ஸ்ரீனிவாசலு சடலம், கடந்த 8ம் தேதி மிதந்தது. இந்த சடலத்தை ஏழுகிணறு போலீசார் மீட்டபோது, அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்ததற்கான காயம் இருந்தது.
இதுகுறித்து ஏழுகிணறு போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆராய்ந்தனர்.
அப்போது, மர்ம நபர் ஒருவர், சடலத்தை இழுத்து வந்து, கூவம் ஆற்றில் வீசி செல்வது தெரிந்தது. இதையடுத்து, அந்த நபர் வந்த காரின் எண்ணை வைத்து, விசாரித்தனர்.
இந்த கொலையில் தொடர்புடைய நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஐ.டி., பிரிவு நிர்வாகியான திருப்பதி, காளஹஸ்தி மாவட்ட பெண் தலைவர் வினுதா கோட்டா, அவரது கணவர் சந்திரபாபு, திருப்பதியைச் சேர்ந்த உதவியாளர் கோபி, 24, கார் ஓட்டுநர் ஷேக்தாசன், 28, ஆகிய ஐந்து பேரும் திருப்பதியில் பதுங்கியிருப்பது தெரிந்தது.
அங்கு சென்ற போலீசார், ஐந்து பேரையும் கைது செய்து, சென்னைக்கு நேற்று அழைத்து வந்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
ஜனசேனாவுடன் கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ., பஜாலா சுதீர் ரெட்டியின் விசுவாசிதான் ஸ்ரீனிவாசலு. பஜாலா சுதீர் கூறியதற்காக, வினுதா கோட்டா வீட்டிற்கு வேவு பார்க்கும் வேலைக்கு சென்றுள்ளார்.
அந்த வீட்டில் நடப்பதை பஜாலா சுதீரிடம் கூறிவந்த ஸ்ரீனிவாசலு, அவ்வப்போது வினுதா கோட்டாவின் அந்தரங்க புகைப்படங்களை, மொபைல் போனில் எடுத்து, அவருக்கு அனுப்பி வந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம், கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்த ஸ்ரீனிவாசலு, படுக்கை அறையில் வினுதா கோட்டா உடைமாற்றுவதை மொபைல் போனில் படம்பிடித்து உள்ளார்.
இதை, வீட்டில் இருந்தோர் பார்த்து, ஸ்ரீனிவாசலுவை தாக்கினர். பஜாலா சுதீர் ரெட்டியின் அறிவுறுத்தல்படி இவ்வாறு செய்ததாக, அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, வினுதா கோட்டா, தன் கட்சி தலைமையிடம் புகார் அளித்தார். கட்சி தலைமை அவரை சமாதானப்படுத்தியது. பின் ஸ்ரீனிவாசலுவை எச்சரித்து அனுப்பி வைத்தது.
எனினும், ஸ்ரீனிவாசலு மீது ஆத்திரத்தில் இருந்த வினுதா கோட்டாவும், அவரது கணவர் சந்திரபாபுவும், அவரை கடத்தி வந்து, தங்கள் வீட்டில் அடைத்து வைத்து, நான்கு நாட்களாக சித்ரவதை செய்துள்ளனர்.
கடந்த 7ம் தேதி, ஸ்ரீனிவாசலு கழிப்பறைக்கு சென்று ஒரு மணி நேரமாகியும் வெளியே வராததால், சந்திரபாபு கதவை தட்டியுள்ளார்.
ஸ்ரீனிவாசலு, கதவை திறக்காமல் கழிப்பறையில் பயத்தில் உட்கார்ந்துள்ளார். அப்போது, சந்திரபாபுவும், கார் ஓட்டுநர் ஷேக்தாசனும், 'டிரில்லிங் மிஷின்' கொண்டு மரக்கதவை உடைத்து, இரும்பு சங்கிலியால், ஸ்ரீனிவாசலு கழுத்தை இறுக்கி கொன்றனர்.
சடலத்தை அப்புறப்படுத்த சிவகுமார் மற்றும் கோபி ஆகியோரின் உதவியை நாடினர். நால்வரும் சேர்ந்து, காரில் சடலத்தை ஏற்றி, சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர்.
அம்மாநில போலீசார் விசாரிக்கக்கூடாது என்பதற்காகவே, சென்னை ஏழுகிணறு கூவம் ஆற்று கரையோரமாக வீசியுள்ளனர்.
இவ்வாறு கூறினர்.