ADDED : பிப் 29, 2024 01:10 AM
சென்னை:பணிக்கு வராதவர்கள் பணியில் இருப்பது போல சம்பள பட்டியல் தயாரித்து, 1 கோடி ரூபாய் வரை நிதி மோசடி செய்த, தென்னக ரயில்வே முன்னாள் ஊழியர், அவரது மனைவிக்கு, தலா ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் அனில்குமார் மீனா, 39. இவர், 2008 செப்., 9ல், திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் ரயில் நிலையத்தில், தண்டவாள பராமரிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
அப்போது அலுவலக கண்காணிப்பாளருடன் அனில்குமார் மீனாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது.
தண்டவாள பராமரிப்பாளர்களின் தகவல்களை சேமிக்கும், 'சாப்ட்வேர் பாஸ்வேர்டு' அனில்குமார் மீனாவுக்கு கிடைத்துள்ளது. இதைப் பயன்படுத்தி, பணிக்கு வராதவர்கள், பணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் விபரங்களை கண்டறிந்து, அவர்கள் தொடர்ந்து பணியில் இருப்பது போன்று சம்பளபட்டியல் தயாரித்துள்ளார்.
மேலும், அவர்களின் வங்கி கணக்கு விபரங்களையும் திருத்தி உள்ளார். பின், தன் மனைவி சுமன் மீனா, 36, பெயரில், தனியார், பொதுத்துறை வங்கிகளில் 23 வங்கி கணக்குகளை துவக்கி, அந்த வங்கி கணக்கில் சம்பளம் வரவு செய்வது போன்று, சாப்ட்வேரில் மாற்றம் செய்துஉள்ளார்.
பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையையும் மோசடி செய்துள்ளார்.
இந்த மோசடி குறித்த புகாரின்படி, சி.பி.ஐ., விசாரணை நடத்தியது.
விசாரணையில், 2015 ஜனவரி முதல் 2017 ஜனவரி வரையிலான காலத்தில், 52 ஊழியர்களின் ஊதிய பணம், அனில்குமார் மீனாவின் மனைவி சுமன் மீனா வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, 1.90 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அனில்குமார் மீனா, அவரது மனைவி சுமன் மீனா மற்றும் அனில்குமார் மீனாவின் தந்தை சீதாராம் மீனா, 64, ஆகியோர் மீது, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் நடந்தது.
விசாரித்த நீதிபதி, 'அனில்குமார் மீனா, சுமன் மீனா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, அவர்களுக்கு தலா ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், அனில்குமார் மீனாவுக்கு 80 லட்சமும், சுமன் மீனாவுக்கு 60 லட்சமும் அபராதமாக விதிக்கப்படுகின்றன' என, தீர்ப்பளித்தார்.
சீதாராம் மீனா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவரை விடுதலை செய்தும்நீதிபதி உத்தரவிட்டார்.

