தோல்வியில் முடிந்தது சமாதானம்: மகனுக்கு பதவி இல்லை! ராமதாஸ் திட்டவட்டம்
தோல்வியில் முடிந்தது சமாதானம்: மகனுக்கு பதவி இல்லை! ராமதாஸ் திட்டவட்டம்
UPDATED : ஜூன் 13, 2025 04:32 PM
ADDED : ஜூன் 13, 2025 02:15 AM

சென்னை: ''தந்தைக்கு பிறகே தனயன்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். தந்தை -- மகன் இடையிலான மோதலுக்கு தீர்வு காண நடந்த சமாதான முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.
இது தொடர்பாக, திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பா.ம.க., தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இருந்தேன். மே 11ல் நடந்த மாமல்லபுரம் மாநாட்டிற்கு, 15 நாட்களுக்கு முன், கவுரவ தலைவர் ஜி.கே.மணி, சமூக முன்னேற்ற சங்க தலைவர் சிவப்பிரகாசம் ஆகியோரிடம், அன்புமணியை சந்தித்து, இந்த விஷயத்தை சொல்லி பேசுமாறு கேட்டுக் கொண்டேன்.
மானபங்கம்
ஆனால், அவர்களை சந்திக்க மறுத்து விட்டார். என்ன சொல்கிறாரோ, அதை அப்படியே எழுதித் தருவதாக ராமதாஸ் சொல்கிறார் என்று, அவர்கள் போனில் சொன்னபோது, ராமதாசை நம்ப முடியாது என அவர் கூறி மறுத்துவிட்டார்.
நான் தயாராக இருந்தும், சமாதானத்திற்கு அன்புமணி தயாராக இல்லை. அதன்பின், என்னுள் இருந்த இயற்கையான கோபம் பொங்கி எழுந்தது.
'நீயா, நானா' என பார்த்து விடுவது என்று முடிவுக்கு வந்து விட்டேன். 'எல்லாம் எனக்கே வேண்டும்' என்கிறார் அன்புமணி. 'தைலாபுரம் தோட்ட கேட்டை சாத்திவிட்டு, கொள்ளுப்பேரன், பேத்திகளுடன் விளையாடட்டும்' என்கிறார். என்னால் அப்படி இருக்க முடியாது.
என்னை சந்திக்க வருபவர்கள் அனைவரையும் சந்திப்பது என் வழக்கம். மக்களோடு மக்களாக, 46 ஆண்டுகளாக பழகி வருகிறேன்.
தொண்டர்கள் என்னை உயிராக நினைக்கின்றனர். நான் அவர்களை என் உயிருக்கும் மேலாக நினைக்கிறேன்.
தொண்டர்கள் என்னை குல தெய்வம் என்று சொல்கின்றனர். நான் அவர்களை வழிகாட்டிகளாக கருதுகிறேன். 46 ஆண்டுகள் உழைத்து உருவாக்கி, கட்டிக்காத்த கட்சியில், ஓரிரு ஆண்டுகள் தலைமையேற்க, எனக்கு உரிமையில்லையா? இப்படி கேட்பதே எனக்கு அவமானமாக இருக்கிறது.
ஒவ்வொரு செங்கல்லாக பார்த்து கட்டிய பா.ம.க., என்னும் மாளிகையில், நான் குடியமர்த்தியவரே, என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் அளவுக்கு, அன்புமணியின் செயல்பாடுகள் இருந்தன; இருக்கின்றன.
நான் கூட்டிய கூட்டத்திற்கு போகக்கூடாது என, மாவட்டச் செயலர்கள் அனைவருக்கும் அன்புமணியே போன் செய்து பேசி, என்னை மானபங்கம் செய்து விட்டார். அன்று நான் அமைதியாக இருந்திருந்தால், அதிகாரம் தானாக அன்புமணியிடம் போயிருக்கும்.
எனக்கும், செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையே நடக்கும் பிரச்னைகள் முழுமையாக உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பல கட்ட பேச்சுக்கு பின்னரும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. சொல்லப்போனால், எந்த முடிவும் எட்டப்படாமல் 'டிரா'வில் முடிந்துள்ளது. கட்சியின் 34 அமைப்புகளைச் சேர்ந்த, 14 பிரதிநிதிகள் வந்து பஞ்சாயத்து பேசி, ஒரு தீர்ப்பு வழங்கினர்.
கண்ணீர் விட்டேன்
அதன்படி, அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர, நான் தயாராக இருந்தேன். இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க, நல்ல எண்ணத்தோடு, இரு பெரும் ஆளுமைகள் சமரசப் பேச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்புமணியை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்க, நான் முட்டாள் அல்ல. ஆனால், மாவட்ட செயலர்களிடம், அவரை கட்சியில் இருந்து நீக்கப் போவதாக கூறியிருக்கிறார்.
என்னுடன் ஒத்துப் போயிருந்தால், ஓரிரு ஆண்டுகளில் நானே அவருக்கு முடிசூட்டு விழா நடத்தியிருப்பேன்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், அன்புமணி தலைவரான போது ஆனந்த கண்ணீர் விட்டேன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது தான் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். தந்தைக்கு பிறகே தனயன்.
அய்யாவுக்கு பின்னே அன்புமணி. குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம். ஆனால், தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே உலகியல் நீதி; சாஸ்திர சம்பிரதாயம். நேர்மையும், தர்மமும் அது தான்.
என்னை குலசாமி என சொல்லிக் கொண்டே, என் நெஞ்சில் குத்துகின்றனர். எங்களுக்கு எல்லாமே ராமதாஸ் என சொல்லிக் கொண்டே, என்னை அதல பாதாளத்தில் தள்ளுகின்றனர்; அவமானப்படுத்துகின்றனர்; சிறுமைப்படுத்துகின்றனர்; என்னை குறிவைத்து தாக்குகின்றனர்.
நான் உருவாக்கிய சமூக ஊடகப்பிரிவு, சமூக வலைதளங்கள் வாயிலாக, இதையெல்லாம் எனக்கு எதிராக செய்கின்றனர். என் கைவிரலைக் கொண்டே என் கண்ணை குத்திக்கொண்டேன். உயிருள்ள என்னை, எல்லா வகையிலும் உதாசீனம் செய்துவிட்டு, என் உருவப் படத்தை மட்டும் வைத்து உத்சவம் செய்கின்றனர்.
என்னை நடைபிணமாக்கி, என் பெயரில் நடைபயணம் செல்லப் போகின்றனர். இது, எல்லாமே நாடகம், அதில் ஒவ்வொருவரும் நடிகர்கள்.
பா.ம.க., என்ற கட்சியை நிறுவிய நான், சட்டசபை தேர்தல் வரை தலைவர் பதவியில் இருக்கக் கூடாதா? நான் கூட்டணி சேர்ந்து அமைச்சராக போவதில்லை.
பொதுக்குழு கூடும்
பா.ம.க.,வின் பொதுக்குழு கூட்டம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. மீண்டும் பொதுக்குழுவை கூட்டி, தலைவர் உள்ளிட்டவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
பொதுக்குழுவை கட்சியின் நிறுவனர் தான் கூட்ட முடியும். அன்புமணி பிரச்னை முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் தேர்தல் ஆணையத்திடம் எந்த தகவலும் கூறவில்லை. தலைவர் பதவி குறித்து கடிதமும் அனுப்பவில்லை.
அன்புமணியுடனான சமாதான பேச்சு தோல்வி அடைந்து விட்டதாகவே நினைக்கிறேன். இரு ஜாம்பவான்கள் பேசியும் நல்ல பதில் வரவில்லை.
சட்டசபை தேர்தல் முடிந்ததும், அன்புமணி தான், கட்சியை பார்த்துக் கொள்ளப்போகிறார். இருந்தாலும், அரசியலில் வாரிசு கிடையாது. நான் யாரிடம் வேண்டுமானாலும் கட்சியை கொடுத்து விட்டு செல்வேன்.
எம்.ஜி.ஆர். மறைந்த பின்தான் ஜெயலலிதா அரசியலுக்கு வந்தார். விஜயகாந்த் மறைவிற்கு பிறகு தான் பிரேமலதா வந்துள்ளார்.
அதற்கு முன், குடும்பத்தில் உள்ள பெண்கள் யாரும் அரசியலுக்கு வரவில்லை. எங்கள் கட்சியின் பொதுச்செயலர் வடிவேல் ராவணனை யாராவது கண்டுபிடித்து கொடுத்தால், 100 ரூபாய் பரிசு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.