குழந்தைகளுக்கான மருந்து தயாரிப்பு உற்பத்தியாளர் சங்கம் யோசனை
குழந்தைகளுக்கான மருந்து தயாரிப்பு உற்பத்தியாளர் சங்கம் யோசனை
ADDED : அக் 16, 2025 07:25 PM
சென்னை:'மருந்து தயாரிக்கும் போது பயன்படுத்தப்படும், 'புரொப்பிலின் கிளைக்கால்' வேதிப்பொருளை சில்லரையில் வாங்கக்கூடாது. அது இல்லாத திரவ மருந்துகளை தயாரிக்க நிறுவனங்கள் முன்வர வேண்டும்' என, இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவர் ஜெயசீலன் கூறியதாவது:
தமிழக மருந்துகள் தரமானவை. அதனால் தான், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வின் போது, இங்கு மிக குறைந்த அளவிலேயே தரமற்ற மருந்துகள் கண்டறியப்படும்.
மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. மருந்து தயாரிப்பின் போது உரிய வழிகாட்டுதல்களையும், தரப்பரிசோதனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
குறிப்பாக, மருந்துகளை கரைப்பதற்கு பயன்படுத்தப்படும், வேதிப்பொருட்களின் சேர்மங்களின் தரத்தை உறுதிசெய்த பின், மருந்தில் உபயோகப்படுத்த வேண்டும். இருமல் மருந்தில் சேர்க்கப்படும், 'புரொப்பிலின் கிளைக்கால்' சேர்மத்தை, அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும்.
சிறிய அளவிலான மருந்து உற்பத்தியாளர்கள், அதை மொத்தமாக வாங்காமல், பொட்டலங்களை பிரித்து சில்லரையாக வாங்கும் போது தான் கலப்படம் நேர்கிறது. அதை தவிர்க்க, பிற உற்பத்தியாளர்களுடன் சேர்ந்து மொத்தமாக வாங்கி பிரித்துக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கான மருந்துகளை தயாரிப்பவர்கள், புரொப்பிலின் கிளைக்கால் வேதிப் பொருள் இல்லாமல், மாற்று வழியில் உற்பத்தி செய்யவும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.