ADDED : பிப் 04, 2024 04:48 AM

காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் இயற்கையில் கிடைக்கிறது. ஆனால், இந்த இரு வகை மின்சாரமும் நாள் முழுதும் ஒரே சீராக கிடைக்காது. அதனால், மின் தேவையை பூர்த்தி செய்ய வசதியாக, அடுத்த நாள் எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பதை காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களை அமைத்தவர்கள், முந்தைய நாளே மின் வாரியத்தின் துணை நிறுவனமான, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
ஏனெனில், அதிகம் வழங்குவதாக தெரிவித்து குறைவாக வழங்கினால், வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க வேண்டிய நிலை உள்ளது. மின் வழித்தடங்களிலும் பாதிப்பும் ஏற்படுகிறது.
எனவே, முன்கூட்டியே தெரிவித்த அளவை விட, 15 சதவீதம் வரை வித்தியாசம் இருக்கலாம்; அதற்கு மேல் குறைவாகவோ, கூடுதலாகவோ மின்சார அளவு இருந்தால், யூனிட்டிற்கு அதிகபட்சம், 3 காசு வீதம், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கலாம் என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது. இது, ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.