ADDED : டிச 03, 2024 03:42 AM

சிவகங்கை : ''தமிழகத்தில் 18 மாதங்களில் போக்குவரத்துக் கழகஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப்பலன் ரூ.3500 கோடி வரை அரசு பாக்கி வைத்துள்ளதை விடுவிக்க வேண்டும்,'' என, சிவகங்கையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளன மாநில பொது செயலாளர் கே.ஆறுமுகநயினார் குற்றம்சாட்டினார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 17,662 வழித்தட கிராமங்களில் 17,322 கிராமங்களுக்கு அரசு பஸ் வசதி உள்ளது. இதில் 10 ஆயிரம் வழித்தடங்கள் வருமானம் இன்றி இயக்கப்படுகின்றன. கிராமப்புற பெண்கள், மாணவர்களின் வசதிக்காக பஸ்களை இயக்குவதால் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுகிறது. இதை ஈடுகட்ட வரவுக்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாச தொகையை அரசே வழங்குவதாக 2022 ல் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை வித்தியாச தொகையை போக்குவரத்துக் கழகத்திற்கு அரசு விடுவிக்கவில்லை.
இதனால் போக்குவரத்து கழகங்கள் தங்கள் இழப்பை ஈடுகட்ட, தொழிலாளர்களின் சேமிப்பு பணம் ரூ.15,000 கோடியை செலவு செய்து விட்டன.
ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்களை வழங்கவில்லை. 18 மாதங்களில் வழங்க வேண்டிய பண பலன் ரூ.3500 கோடி பாக்கியுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக 93,000 ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியத்துடன் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு இல்லை. மாதம் ரூ.100 கோடி வரை ஓய்வூதியர்களுக்கு மறுக்கப்படுகிறது.
எட்டாண்டுகளில் 10,000 ஓய்வூதியர்கள் இறந்துள்ளனர். வயது 70 க்கு மேல் ஓய்வூதியர் 25,000 பேர் வரை உள்ளனர். அகவிலைப்படி உயர்வு வழங்க உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு செவிசாய்க்காமல் மேலும் நீதிமன்றத்தில் அப்பீல் செய்கிறது. போக்குவரத்து ஊழியர்களுக்கு பேசி முடிக்கப்பட்ட வேண்டிய சம்பள ஒப்பந்தத்தை ஒரு ஆண்டிற்கும் மேலாக பேசி முடிக்கவில்லை. என்றார்.