தள்ளுபடி சொத்து வரி நிலுவையானது; 'நோட்டீஸ்' வந்ததால் மக்கள் அதிர்ச்சி
தள்ளுபடி சொத்து வரி நிலுவையானது; 'நோட்டீஸ்' வந்ததால் மக்கள் அதிர்ச்சி
ADDED : மார் 04, 2024 04:39 AM

சென்னை : அரசின் தள்ளுபடி அறிவிப்பை நம்பி, சொத்து வரியை முன்கூட்டியே செலுத்தியவர்களுக்கு, நிலுவை தொகையை கட்டும்படி நோட்டீஸ் வந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.
தமிழகத்தில், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில், கட்டடங்களுக்கான சொத்து வரி வசூல் தான் பிரதான வருவாய் ஆதாரம். கடந்த, 2022ல் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டது.
புகார்
மேலும், 2023 - 24ம் நிதியாண்டு துவங்கியதும், ஏப்ரல் இறுதிக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு சிறப்பு சலுகை வழங்க முடிவானது. இந்த சலுகை, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் அறிவிக்கப்பட்டது.
இதை நம்பி பெரும்பாலான மக்கள், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தங்களின் சொத்து வரியை செலுத்தி விட்டனர்.
அவர்களுக்கு நேரடியாகவும், ஆன்லைன் முறையிலும் ரசீதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், இந்த மாதத்துடன் நிதி ஆண்டு முடியும் நிலையில், தள்ளுபடியுடன் முன்கூட்டியே வரி செலுத்தியோருக்கும், தள்ளுபடி தொகையை நிலுவைத்தொகை என, நோட்டீஸ் அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, பொது மக்கள் கூறியதாவது:
மாநகராட்சிகள், நகராட்சிகளில், வீடு வீடாக சென்று சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. இதற்காக, நிலுவை தொகை பட்டியலிடப்பட்டு, அதன் அடிப்படையில் வீடுகளுக்கு கேட்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஏமாற்று வேலை
இதில், அரசின் தள்ளுபடி சலுகையை நம்பி சொத்து வரி கட்டியவர்களுக்கு, 5 சதவீத தொகை நிலுவையில் இருப்பதாக நோட்டீஸ் வருகிறது.
வசூல் பணி அலுவலர்களும் முறையாக பதில் அளிக்காததால், அரசின் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்று வேலையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

