'ஆன்லைன்' முறையில் பட்டா பிரதி; ஓ.டி.பி., கிடைக்காமல் மக்கள் தவிப்பு
'ஆன்லைன்' முறையில் பட்டா பிரதி; ஓ.டி.பி., கிடைக்காமல் மக்கள் தவிப்பு
ADDED : ஜன 04, 2025 02:12 AM

சென்னை: இணையவழியில் பட்டா பிரதி எடுப்பதற்கு, மொபைல் போன் எண் கொடுத்தாலும், அதற்கான ஓ.டி.பி., எனப்படும் தகவல் கிடைப்பதில்லை என, பொது மக்கள் புகார் கூறுகின்றனர்.
தமிழகத்தில், 2000ம் ஆண்டுக்கு பின், கணினி வாயிலாக பட்டா தயாரிக்கப்படுகிறது. இந்த விபரங்களை, 'இ - சேவைகள்' இணையதளம் வாயிலாக பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான இணையதளத்தில் ஊரகம், நகர்ப்புறம், நத்தம் நிலங்களின் பட்டா, நில வரைபட விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
பொது மக்கள் தங்கள் மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே எண் அல்லது பட்டா எண் விபரங்களை உள்ளீடு செய்தால் விபரங்களை பார்க்க முடியும்.
வீடு, மனை வாங்கும் மக்கள், சம்பந்தப்பட்ட சொத்தின் உண்மை தன்மையை அறிய, இந்த வசதி பேருதவியாக இருந்தது.
இந்நிலையில், நிலத்தின் அடிப்படை தகவல்களை உள்ளீடு செய்யும்போது, அவர்களின் மொபைல் போன் எண்ணையும் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு, சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது.
அவ்வாறு தெரிவிக்கப்படும் மொபைல் போன் எண்ணுக்கு, ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை ரகசிய குறியீட்டு தகவல் வரும். அதை இணையதளத்தில், 2 நிமிடங்களுக்குள் உள்ளீடு செய்தால் மட்டுமே, பட்டா பிரதியை மக்கள் பார்க்க முடியும்.
இதன்படி, பொது மக்கள் மொபைல் போன் எண்ணை சரியாக அளித்தாலும், குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓ.டி.பி., வருவதில்லை.
இதுகுறித்து, பொது மக்கள் கூறியதாவது:
மொபைல் போன் எண்களை பதிவு செய்வதில், பொது மக்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அதற்கான செயல்பாடு சரியாக இல்லை. சரியான விபரங்களை அளித்தாலும், 2 நிமிடங்களுக்குள் ஓ.டி.பி., வருவதில்லை.
நேரம் கடந்ததும் மீண்டும் பெற வேண்டும் என்றால், அனைத்து விபரங்களையும் மீண்டும் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது.
இதனால், 5 நிமிடத்தில் முடியும் வேலைக்கு, 15 நிமிடங்களை செலவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. மீண்டும் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து, அனைத்து விபரங்களையும் அளித்தாலும் ஓ.டி.பி., வருவதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, நில அளவை மற்றும் நில வரித் திட்ட துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தொழில்நுட்ப பிரிவு வாயிலாக, இந்த புகார்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்; விரைவில் சரி செய்யப்படும்' என்றார்.