சென்னையில் பால், காய்கறிக்கு அலைந்த மக்கள்: விலையை உயர்த்திய வியாபாரிகள்
சென்னையில் பால், காய்கறிக்கு அலைந்த மக்கள்: விலையை உயர்த்திய வியாபாரிகள்
ADDED : அக் 16, 2024 04:14 AM

சென்னை: சென்னைக்கு, 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்களிடையே பீதியை ஏற்படுத்தின.
மழைக்கு முன்பே, தாழ்வான பகுதி மக்கள் முகாம்களுக்கு அழைக்கப்பட்டதால், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போர், தங்களது நான்கு சக்கர வாகனங்களை மேம்பாலங்களில் நிறுத்தினர்.
பொதுமக்கள், பால், காய்கறிகள், குடிநீர் கேன்களை வாங்கி சேமிக்கத் துவங்கினர். ஒருவரே, கிலோ கணக்கில் காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றதால், நேற்று முன்தினம் மாலையே பெரும்பாலான கடைகளில் பொருட்கள் விற்றுத் தீர்ந்தன.
காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்பட்டதால், 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, கிலோ 100 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டது. அதேபோல, வெங்காயம் 90 ரூபாய்; மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்தது. சில இடங்களில் பால் தட்டுப்பாட்டை தொடர்ந்து, அரை லிட்டர், 35 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
மேலும், 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேன் குடிநீர், 50 ரூபாய் வரை விலை உயர்ந்தது. இவ்வளவு விலை உயர்ந்தாலும், ஆவின் பால் தட்டுப்பாடு நிலவியது. மழைக்கு முன் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்தாலும், மக்களின் அத்தியாவசிய பொருட்களின் மீது கவனம் செலுத்துவதில் கோட்டை விட்டுள்ளது.
குறிப்பாக, அரசு நடத்தும் ஆவின் பாலுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே, ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். காய்கறிகளின் தட்டுப்பாட்டை குறைப்பதுடன், அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.