கோவையில் மக்கள் ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர் கோவை மாமன்றத்தில் ஆளும்கட்சி எம்.பி., ஆவேசம்
கோவையில் மக்கள் ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர் கோவை மாமன்றத்தில் ஆளும்கட்சி எம்.பி., ஆவேசம்
ADDED : பிப் 07, 2025 10:50 PM

கோவை:''கோவை மாநகராட்சியில், மக்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்,'' என, எம்.பி., ராஜ்குமார் பேசினார்.
கோவை மாநகராட்சியில் நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக, தி.மு.க., - எம்.பி., ராஜ்குமார் பங்கேற்றார்.
மன்றத்தில், அவர் பேசியதாவது:
கோவையில் செல்லும் இடங்களில் எல்லாம் 'ட்ரோன் சர்வே' பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண் கூறும்போது, 'கார்ப்பரேஷன்ல இருந்து வர்றாங்க... 'ஏரோபிளேன்' பறக்க விடுறாங்க... அளவீடு செய்கிறார்கள். சொத்து வரி பல மடங்கு உயர்ந்திருக்கிறது என கூறுகிறார்கள். கேட்டால் மிரட்டுகிறார்கள்' என புலம்புகிறார்.
அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கிறேன்; பில் கலெக்டர்களின் ஆட்டத்தை குறைத்து வையுங்கள். (மேஜையை தட்டி கவுன்சிலர்கள் ஆரவாரம்) கீழ்மட்டத்தில் நடக்கும் விஷயங்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் கமிஷனரின் பார்வைக்கு வருவதில்லை.
பில் கலெக்டர்களின் செயல் இதேபோல் சென்றால், அமைச்சர் மற்றும் மேலிடத்தில் பேசி, அவர்கள் கூண்டோடு மாற்றப்படுவர். அதற்கான முன்னெடுப்பை செய்வது நானாகவே இருப்பேன். (மேஜையை தட்டி கவுன்சிலர்கள் ஆரவாரம்)
அப்பாவி மக்கள், ரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு கமிஷனர் விரைந்து தீர்வு காண வேண்டும். கீழ்மட்டத்தில் நடக்கிற சீர்கேட்டினால், நிர்வாகத்துக்கும், அரசுக்கும் கெட்டப்பெயர்.
சூயஸ் என்ற நிறுவனம், தனியாக ஒரு நிர்வாகத்தை கோவை மாநகராட்சியில் செய்து கொண்டிருக்கிறது. மாநகராட்சியில் திறமையான அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்களால் முறையாக தண்ணீர் விநியோகத்தை செய்ய முடியாதா?
சூயஸ் நிறுவனத்தினரை யாராலும் கட்டுப்படுத்த முடிவதில்லை. ரோடுகளை தோண்டி போட்டு மாதக்கணக்கில் மூடுவதில்லை. யார் சொன்னாலும் கேட்பதில்லை. மாநகராட்சி அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாது என்றால், அவ்வளவு பலம் வாய்ந்ததா சூயஸ் நிறுவனம்?
இதே நிலை நீடித்தால், தேர்தலுக்குள் ரோடு பணியை முடிக்க முடியாது. இன்னும் ஒரு ஆண்டுக்கு ரோடுகளை தோண்ட வேண்டாம். வீட்டு இணைப்பு கொடுக்கிறோம் என கூறி, கூத்தடிக்க வேண்டாம்; நாங்கள் தேர்தலை சந்திக்க வேண்டும்.
இவ்வாறு, எம்.பி., ராஜ்குமார் பேசினார்.