ADDED : செப் 19, 2025 03:03 AM

நெல்லிக்குப்பம்:தரமில்லாத அரிசி வழங்கியதால், ரேஷன் கடை ஊழியரை கடையினுள் வைத்து பொதுமக்கள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம், முள்ளிகிராம்பட்டில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்கள் நேற்று காலை அத்தியாவசிய பொருட்கள் வாங்க அங்குள்ள ரேஷன் கடைக்கு சென்ற போது, அரிசி தரமில்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ரேஷன் கடை ஊழியர் சக்திவேலுவிடம் வாக்குவாதம் செய்தனர்.
அவர், 'நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து வந்த அரிசிக்கு நான் என்ன செய்வேன்' என, கூறினார். ஆத்திரமடைந்த மக்கள், அவரை கடையினுள் வைத்து பூட்டியதால் பரபரப்பு நிலவியது. நெல்லிக்குப்பம் போலீசார் பேச்சு நடத்தி, கடையை திறந்து ஊழியரை விடுவித்தனர்.
வட்ட வழங்கல் அலுவலர் ஆனந்தி, தரமான அரிசி வழங்குவதாக உறுதியளித்தார்.