தி.மு.க., அரசு மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தி: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்
தி.மு.க., அரசு மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தி: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்
ADDED : மார் 01, 2025 10:40 PM

சென்னை: ''தி.மு.க., அரசு மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்,'' என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறினார்.
த.வெ.க., என்ற கட்சியை துவக்கி உள்ள நடிகர் விஜய்க்கு தேர்தல் ஆலோசனைகளை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் வழங்கி வருகிறார்.
சவால்
அவர் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த விஜய் முயற்சி செய்கிறார். தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக விஜயை உருவெடுக்க வைக்க உதவப் போகிறேன். அவரது பிரபலம் காரணமாக அவருக்கு பலம் உள்ளது. ஊழல், மதவாதம், வாரிசு அரசியல் ஆகியன தமிழகத்தின் பெரிய அரசியல் சவாலாக உள்ளது.
உ.பி., ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை விட தமிழகத்தில் தேர்தலில் போட்டியிட நிறைய பணம் செலவாகிறது. இது பெரிய ஆபத்து. தமிழகத்தில் மதவாதம் தலைதூக்க ஆரம்பித்து உள்ளது. இதற்கு பா.ஜ., தான் காரணம். அக்கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் ஓட்டு சதவீதம் உள்ளது. இதுவே ஆபத்துக்கான சான்று. வாரிசு அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பு கொடுத்தால் மற்றவர்களின் நிலை என்ன?
அரசியல் களத்தில்
கட்சியின் அமைப்பு பலத்தை பெருக்குவதுதான் த.வெ.,க.,வின் பெரிய சவாலாக இருக்கும். விஜய்க்கு ரசிகர் பலம் இருந்தாலும் அதனை ஓட்டாக மாற்ற வலுவான கட்டமைப்பு அவசியம். அதுதான் மிகப்பெரிய சவால். தொழில்நுட்ப யுகத்தில் இதனை சாதிக்க முடியும். மக்களிடம் உள்ள ஆதரவை ஓட்டாக மாற்றுவது பெரிய சவால். விஜய், கடைசி படத்தை முடித்து விட்டு, ஒரு மாதத்தில் தீவிரமாக அரசியல் களத்தில் பணியாற்றப் போகிறார்.
தமிழகத்தில் பெரும்பாலானோர். புதிய நேர்மையான அரசியல் மாற்றத்தை தேடுகின்றனர். அவர்களின் ஆதரவை விஜய் பெற்றுள்ளார். அவர் 8 அல்லது 12 சதவீத ஓட்டு வாங்க வாய்ப்பு இல்லை. ஒன்று பெரிய சக்தியாக உருவெடுக்க வேண்டும். அல்லது அதலபாதாளம் தான். இன்னும் 5, 10 ஆண்டுகள் உழைக்க வேண்டியிருக்கும். அ.தி.மு.க., விஜய் பரஸ்பரம் விமர்சிக்கவில்லை என்பதற்கு அவர்களிடம் தான் காரணம் கேட்கவேண்டும்.
நிலைப்பாடு
விஜய் தனித்து நிற்கவே விரும்புகிறார். அது மாறும் என தோன்றவில்லை. டிச., வரை கூட்டணி கிடையாது. த.வெ.க., தனித்து போட்டியிடும் என உறுதியாக சொல்ல முடியும். நிலைமை மாறினால், அதற்கு ஏற்றவாறு ஜனவரியில் முடிவெடுப்போம். எங்கள் திட்டத்தில் உறுதியாக இருக்கிறோம். தனித்து போட்டி என்பது தான் முடிவு. அடுத்த 6, 8 மாதங்கள் அவர் தீவிரமாக களமாடுவார். அதன் பிறகு கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என்பது பற்றி முடிவெடுப்போம். தனித்துப் போட்டி என்பது நிலைப்பாடு.
திமுக., மீது மக்களுக்கு கடும் அதிருப்தி உள்ளது. பெரிய நம்பிக்கை கொடுத்து ஆட்சிக்கு வந்த அக்கட்சி மீது ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. கூட்டணி பற்றியோ, கூட்டணியை தேடுவது பற்றியோ விஜயிடம் சிந்தனை இல்லை. விஜய் தனித்து நின்றால் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. தீவிரமாக உழைத்தால் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தினால் தனித்து ஆட்சி அமைக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
அவசியம் ஏன்
இதே திமுக.,கூட்டணி தொடர்ந்தால், பாஜ., உடன் அ.தி.மு.க., கூட்டணி அமைத்தால், விஜய் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. கடுமையான களப்பணி ஆற்றும் போது இதற்கான வாய்ப்பு உள்ளது.விஜய் முழு நேரம் களப்பணி ஆற்ற வேண்டும். முழு மனதோடு பணியாற்றவேண்டும் என்பது எனது அறிவுரை.
தி.மு.க., தான் தமிழகத்தின் ஆளுங்கட்சி என்பதால் அக்கட்சியை எதிர்க்கிறார். பா.ஜ., தமிழகத்தை ஆட்சி செய்யவில்லை. மாநல தேர்தலில் தேவையைதாண்டி பா.ஜ.,வை எதிர்க்க வேண்டியது ஏன்? இங்கு அக்கட்சி ஒரு சக்தியே கிடையாது. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.