ஆட்சிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்: அரிட்டாபட்டியில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
ஆட்சிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்: அரிட்டாபட்டியில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
UPDATED : ஜன 26, 2025 07:05 PM
ADDED : ஜன 26, 2025 06:22 PM

மதுரை: '' திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் என்றும் ஆதரவு தர வேண்டும்,'' என அரிட்டாபட்டியில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
மதுரை மாவட்டம் மேலுார் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, தனியார் நிறுவனத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதை எதிர்த்து, அப்பகுதி மக்கள் போராடி வந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
'டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 'டங்ஸ்டன் சுரங்கம் கண்டிப்பாக வராது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் உறுதி அளித்திருந்தார்.
அவரது தலைமையில் டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக் குழுவினர், டில்லியில் மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசினர். அதைத் தொடர்ந்து, டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்யப்பட்டதற்காக அரிட்டாப்பட்டியில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பார்லிமென்டில் எம்.பி.,க்கள் பேசினர். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளித்தனர். அப்போது நான் சட்டசபையில் பேசும்போது, மக்களால் ஆட்சியில் இருக்கும் நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் வராது. அது பற்றி மக்கள் கவலைப்பட தேவையில்லை. அப்படிவந்தால் பதவியில் இருக்க மாட்டேன்', எனச்சொன்னேன்.
எனக்கு பாராட்டு தெரிவிப்பதை விட, உங்களுக்கு பாராட்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். இங்கு பிரித்து பேச விரும்பவில்லை. நாம், நமக்கு எனவே பேச விரும்புகிறேன். இன்னும் ஒன்றரை ஆண்டில் தேர்தல் வரப்போகிறது.
அதில், நீங்கள் என்ன முடிவில் உள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது. ஆட்சிக்கு மக்கள் என்றும் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
3 மாதத்தில் வெற்றி
வல்லாளப்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது: இது நமக்கு கிடைத்த வெற்றி. டங்ஸ்டன் சுரங்கத்தை கொண்டு வர பா.ஜ., திட்டமிட்டது. ஆனால், மக்கள் சக்தியுடன் தடுத்த நிறுத்தி உள்ளோம். டங்ஸ்டன் சுரங்கம் அறிவிப்பு வெளியான உடனே நீங்கள் போராட்டம் நடத்தினீர்கள். ஆனால், 3 மாதத்தில் வெற்றியை கண்டுள்ளீர்கள். மத்திய அரசு பணிந்து ரத்து செய்துள்ளது. இதற்கு, மக்களும், தமிழக அரசும் காண்பித்த கடுமையான எதிர்ப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது சாதாரண வெற்றி அல்ல. மாபெரும் வெற்றி.
இந்த சுரங்கத்திற்கு மூல காரணம், மாநில அரசின் அனுமதி இல்லாமல், முக்கிய கனிமவளங்களை ஏலத்தில் விடலாம் என மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் தான் காரணம். இதற்கான மசோதாவை பார்லிமென்டில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் எதிர்த்தன. ஆனால், அ.தி.மு.க., எதிர்க்கவில்லை. தொடர்ந்து இரண்டு முறை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். அரசியல் காரணத்திற்காக மறைக்க பார்க்கின்றனர். மறைக்கின்றனர்.டங்ஸ்டன் பிரச்னை நமது பிரச்னை. அரசியல் பிரச்னையாக கருதவில்லை. பதவியை பற்றி எனக்கு கவலையில்லை. மக்களைப் பற்றி தான் கவலை. உங்களுக்காக தான் இந்த ஆட்சி. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.