இலவச வீட்டு மனை நிலங்களை விற்க முடியாமல் மக்கள் தவிப்பு
இலவச வீட்டு மனை நிலங்களை விற்க முடியாமல் மக்கள் தவிப்பு
ADDED : செப் 13, 2023 01:18 AM
இலவச வீட்டு மனை பட்டாக்கள், இணையதளத்தில் பதிவேற்றப்படாததால், அதன் உரிமையாளர்கள் விற்பனை உள்ளிட்ட நடவடிக்கைகளில், ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர்.
புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசிப்பவர்களுக்கு, இலவச மனைப்பட்டா வழங்கும் திட்டத்தை, 2006ல் தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி, அரசு துறைகளுக்கு ஆட்சேபனை இல்லாத, நீர் நிலைகள் அல்லாத நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு, 3 சென்ட் இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது.
இந்த திட்டம் தற்போதும் நடைமுறையில் உள்ளது. தற்போது வரை, 4.37 லட்சம் பேருக்கு, வருவாய் துறை சார்பில், இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது.
இந்த முறையில் பட்டா பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட நிலத்தை, 10 ஆண்டிற்குள் வெளியாட்களுக்கு விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், 10 ஆண்டுகள் முடிந்தும், நிலங்களை விற்க முடியாமல் உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சிக்கலை தீர்க்க வேண்டும்
ஆட்சேபனை இல்லாத நிலங்களில் வசிப்பவர்களுக்கு, வருவாய் துறை வாயிலாக இலவச மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேனுவல் முறையில் வழங்கப்பட்ட இந்த மனை பட்டாக்கள், இன்னும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்படவில்லை.
கட்டட அனுமதி, பத்திர பதிவு பணிகள் ஆன்லைன் முறைக்கு மாறியதால், மேனுவல் முறையில் இருக்கும் இலவச மனை பட்டாக்களை பயன்படுத்த முடியவில்லை; வீடு, மனை விற்பனை, கடன் வாங்குவது, கட்டட அனுமதி போன்றவற்றை பெற முடியாமல் தவிக்கின்றனர். இந்த பட்டா விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, வருவாய் துறைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.
- பி.பாலமுருகன்,
ரியஸ் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்
- நமது நிருபர் -