ADDED : செப் 29, 2026 04:45 AM

மதுரை: முதல்வர் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக நேற்று, தனி விமானத்தில் மதுரை வந்த முதல்வர் ஜோசப் விஜய்க்கு விமான நிலையம் முதல் அரசு மருத்துவமனை, காந்தி மியூசியம், மீனாட்சி அம்மன் கோயில் வரை மக்கள் வழிநெடுகிலும் இருபுறமும் நின்று மலர்துாவி வரவேற்றனர். பதிலுக்கு விஜய்யும் திறந்த வேனில் பயணித்து மலர்துாவி வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
நேற்று காலை 10:45 மணிக்கு விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜயை மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன், எம்.எல்.ஏ.,க்கள் கார்த்திகேயன், கல்லாணை, விஜய் மகாலிங்கம், கோபிசன், முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன், நகர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ்குமார், ராஜாசம்பத்குமார், அர்ஜூன் சீமைச்சாமி, மகேந்திரன், கிழக்கு மாவட்ட இணைச்செயலாளர் கார்த்திக், செயற்குழு உறுப்பினர் தனஞ்செயன், கிழக்கு தொகுதி ராஜன், டாக்டர்கள் பிரசன்னா லெனின், சந்தோஷ் லெனின், ஐ.டி., விங்க் தெற்கு மாவட்ட இணை அமைப்பாளர் முகுந்தன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
எச்சரித்த முதல்வர் நிர்வாகிகள் பலரும் முதல்வர் விஜய் காலில் விழுந்தனர். விமானம் நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை வழிநெடுகிலும் மக்கள் மலர்துாவி வரவேற்றனர். சிந்தாமணி ரிங் ரோடு டோல்கேட் பகுதியில் இருந்து திறந்த வேனில் நின்று முதல்வர் பயணித்தார். அவரது பாதுகாவலர் ஒருவர் தவறிவிழுந்தார். தெப்பக்குளம் வைகை தென்கரை ரோட்டில் வந்தபோது மீனாட்சி அம்மன் வேடத்தில் இருந்த சிறுமியை முதல்வர் துாக்கி மகிழ்ந்தார். பின் வேனில் நின்றவாறே அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது நுழைவுவாயில் அருகே மின்கம்பத்தில் நின்ற தொண்டரை பார்த்து 'இறங்குப்பா' என எச்சரித்தார்.
அரசு மருத்துவமனை, காந்தி மியூசியம் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதிய உணவுக்காக சர்க்கியூட் ஹவுஸ் சென்றார். அங்கு மதுரை வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின் மதியம் 3:50 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு புறப்பட்டார். வழிநெடுகிலும் மக்கள் இருபுறமும் நின்று மலர்துாவி வரவேற்றனர். பதிலுக்கு அவரும் மலர்துாவினார்.
அவுட்போஸ்ட் பகுதியில் வந்தபோது தொண்டர் கொடுத்த வேலை ஏந்தியபடி கோரிப்பாளையம் வரை பயணித்தார். சமீபத்தில் கார் ரேஸில் நடிகர் அஜித்துடன் இருக்கும் போட்டோவை தொண்டர் ஒருவர் வழங்கினார். திறந்தவேனிலேயே மாலை 4:15 மணிக்கு கோயிலுக்கு வந்து தரிசனம் முடித்துவிட்டு புறப்பட்டு சென்றார். பின்னர் ரிங் ரோடு வழியாக சென்னை புறப்பட்டு சென்றார்.
