பட்டா வாங்க மறுத்த மக்கள்; பொன்முடியிடம் வாக்குவாதம்
பட்டா வாங்க மறுத்த மக்கள்; பொன்முடியிடம் வாக்குவாதம்
ADDED : ஏப் 01, 2025 03:06 AM

விழுப்புரம் : விழுப்புரம், வி.மருதுார் பவர் அவுஸ் சாலையில், ரயில்வே ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளையும், அங்குள்ள அம்மன் கோவிலையும் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்பு இடத்தில் வசிப்பவர்களுக்கு விழுப்புரம், திருப்பாச்சனுாரில் இடம் ஒதுக்கி, 44 பேருக்கு பட்டா வழங்கும் விழா நேற்று நடந்தது.
பட்டா பெற வந்த மக்கள், 'நகர பகுதியில் மாற்று இடம் வழங்க வேண்டும்' என, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் கனிமொழி மக்களை சமாதானப்படுத்தினர். அமைச்சர் பொன்முடி, இலவச பட்டா வழங்கியபோது, பட்டா வாங்க மறுத்த பெண்கள், 'நகரில், 50 ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீட்டை அகற்றி, 5 கி.மீ.,யில் உள்ள கிராமத்தில் வழங்குவதை ஏற்க மாட்டோம். நகரில் மாற்று இடம் வேண்டும்' என, வாக்குவாதம் செய்தனர்.
அமைச்சர் பொன்முடி, “நீங்கள் வசிக்கும் பகுதி ரயில்வே இடம். அங்கு பட்டா வழங்க முடியாது. தற்போது பட்டா வழங்கிய இடத்தில், அரசு சார்பில் விரைவில் வீடு கட்டி தரப்படும்.
''அதுவரை, தற்போது வசிக்கும் பகுதியிலேயே வசிக்க, ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி பெற்று தருகிறோம். வீடு கட்டி செல்லும் வரை, மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்,” என்றார்.
இதை ஏற்று, சிலர் மட்டும் இலவச பட்டாக்களை வாங்கினர். சிலர், வாங்க மறுத்ததால், டென்ஷனான அமைச்சர், “அரசால் இதைத்தான் செய்ய முடியும். கொடுப்பதை வாங்கிச் செல்லுங்கள்,” என்றார்.
அமைச்சரின் கறார் பேச்சைக் கேட்டு, பெண்கள் அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. சுதாரித்த அமைச்சர், “நிலைமையை புரிந்துகொள்ள வேண்டும்,” என, மீண்டும் அவர்களை சமாதானப்படுத்தி, 10க்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கிவிட்டு புறப்பட்டார்.

