ADDED : ஜன 12, 2026 06:01 AM

சென்னை : பொங்கல் பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில், பொதுமக்கள், கடந்த 9ம் தேதி முதலே, அரசு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை: பொங்கல் பண்டிகைக்காக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடந்த 9, 10ம் தேதிகளில், 5,510 பஸ்கள் இயக்கப்பட்டன. அவற்றின் வாயிலாக, முன்பதிவு செய்யாத, 2 லட்சத்து, 47,180 பயணியர், தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
அவர்களுடன், சென்னையில் இருந்து முன்பதிவு செய்திருந்த, 2.19 லட்சம் பேரும் பயணித்துள்ளனர். வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளான கடந்த 9, 10ம் தேதிகளில், அதிக பயணியர் சொந்த ஊர் புறப்பட்டு சென்றுள்ளனர்.
சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால், பயணியர் தங்களுக்கு வசதியான நாள், நேரத்துக்கு ஏற்ப முன்பதிவு செய்து பயணித்தால், கடைசி நேர நெரிசலை தவிர்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

