பணநாயகத்திற்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்: அண்ணாமலை பேட்டி
பணநாயகத்திற்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்: அண்ணாமலை பேட்டி
UPDATED : ஏப் 19, 2024 12:44 PM
ADDED : ஏப் 19, 2024 08:36 AM

கோவை: 'பணநாயகத்திற்கு கோவை மக்கள் முடிவு கட்டுவார்கள்' என தமிழக பா.ஜ., தலைவரும், கோவை தொகுதி பா.ஜ., வேட்பாளருமான அண்ணாமலை நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் ஊத்துப்பட்டி அரசு துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடியில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஓட்டளித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கோவை தொகுதியில் பா.ஜ., ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை. அப்படி நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன். நல்லவர்கள் நம்மை ஆள வேண்டும்.
ஜனநாயகத்தின் வலிமை
ஆள்பவர்களோடு தொப்புள்கொடி உறவு நீடிக்க ஓட்டளிக்க வேண்டும். பணநாயகத்திற்கு கோவை மக்கள் முடிவு கட்டுவார்கள். ஜனநாயகத்தின் வலிமை என்பது வாக்காளர்கள் தான். எங்கு இருந்தாலும் மாலை 6 மணிக்குள் ஓட்டளித்து நல்லவர்களை தேர்ந்தெடுங்கள்.
ஜூன் 4ம் தேதி நல்ல முடிவு
கேள்வியாகவும், தவமாகவும், வெளிப்படையாகவும் லோக்சபா தேர்தலை எதிர்கொண்டிருக்கிறோம். தேர்தல் திருவிழா நாளில் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். திராவிட கட்சிகள் பணம் கொடுத்து ஓட்டுகள் பெறுவதற்கு இந்த லோக்சபா தேர்தலில் முடிவு கட்டப்படும். மாற்றம் ஏற்பட ஓட்டளிக்க வேண்டும். ஜூன் 4ம் தேதி நல்ல முடிவு கிடைக்கும். 39 தொகுதிகளும் வெல்வோம்.
கோவை மாடல்
எப்போதும் பெரிய கவலைதான். காரணம், கொங்கு மண்டலத்தில் எப்படியாவது மக்களை விலைக்கு வாங்கலாம் என்று திமுக நினைப்பதுதான். ஜூன் 4ம் தேதி வெளிவரவிருக்கும் கோவை மாடல் நாடு முழுவதும் ஒரு முன் மாதிரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஓட்டு சாவடிகளில் அண்ணாமலை ஆய்வு
ஓட்டளித்து விட்டு, கரூரில் இருந்து கோவைக்கு வந்த அண்ணாமலை சூலூரில் மூன்று ஓட்டு சாவடிகளில் ஆய்வு செய்தார். ஓட்டு சதவீதம் குறித்து அதிகாரிகள், கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது, ஒருபெண் 30 ஆண்டுகளாக ஓட்டளிக்கிறேன். இந்த முறை பட்டியலில் போட்டோ மாறியுள்ளதாக கூறி ஓட்டளிக்க வாய்ப்பு அளிக்க மறுத்துவிட்டனர் என, புகார் தெரிவித்தார். இது குறித்து விசாரிப்பதாக அண்ணாமலை அப்பெண்ணிடம் கூறினார்.

