மக்கள் உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள்; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
மக்கள் உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள்; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
ADDED : டிச 21, 2024 01:15 PM

சென்னை: 'தமிழகத்தின் உரிமைகளைத் தரவில்லையென்றால், தமிழக மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பார்லிமென்டில் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25ம் தேதி துவங்கி, நேற்றைய தினம் முடிவுற்றுள்ளது. இக்கூட்டத் தொடரில் வீறுகொண்ட வீரர்களாக, தி.மு.க., எம்.பி.,க்கள் முழங்கி இருக்கிறார்கள். தி.மு.க. எம்.பி.க்கள் என்ன பேசுகிறார்கள். நாட்டை உலுக்கும் முக்கியப் பிரச்னைகளில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை இன்று நாடே உன்னிப்பாக கவனிக்கும் நிலைக்கு இந்த திராவிடப் பேரியக்கம் வளர்ந்திருப்பதை நினைத்தும் பெருமையாக இருக்கிறது.
குளிர்காலக் கூட்டத் தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், லோக்சபா 54.5 விழுக்காடும், ராஜ்யசபா 40 விழுக்காடும்தான் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைவிட வேதனையான செய்தி இருக்க முடியுமா? நமது நாட்டின் பெருமைமிக்க அரசியல் சட்டத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தின்போது பா.ஜ., ஆட்சியின் கையில் பார்லிமென்ட் ஜனநாயகம் எப்படி பிய்த்து எறியப்பட்டுள்ளது என்பதற்கு இந்த குளிர்காலக் கூட்டத்தொடரே சாட்சி.
இதுதான் பா.ஜ., வின் பசப்பு அரசியல் ஆகும். தமிழக மக்கள் “நாற்பதுக்கு நாற்பது” என்ற தேர்தல் வெற்றியைத் தந்தபோது - “பார்லிமென்டிற்கு சென்று இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?' என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். மெட்ரோ ரயில் திட்ட நிதி ஒதுக்கீடு, விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரிக்கை, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்துதல், சுங்கச்சாவடிகளை ஒழித்தல், நீட் தேர்வு முறைகேடுகள் இப்படி எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தின் உரிமைகளை எந்த மாநில எம்.பி.க்களைக் காட்டிலும் தமிழக மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர்.
மத்திய அரசு தொடர்ந்து தமிழக மக்களை ஓரவஞ்சனையுடன், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்த முடியாது என்ற செய்தியை அழுத்தம் திருத்தமாகக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார்கள் நமது எம்.பி.க்கள். இனியும் மத்திய அரசு திருந்தவில்லை என்றால், தமிழகத்தின் உரிமைகளைத் தரவில்லையென்றால் தமிழக மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.