தி.மு.க., அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: ராமதாஸ்
தி.மு.க., அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: ராமதாஸ்
UPDATED : டிச 05, 2024 04:53 PM
ADDED : டிச 05, 2024 04:39 PM

விழுப்புரம்: '' தி.மு.க., அரசுக்கு, தமிழக மக்கள் சரியான நேரத்தில், சரியான பாடத்தை புகட்டுவார்கள், '' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: 119 அடி கொள்ளளவு கொண்ட சாத்தனூர் அணை நவ.,30ம் தேதியே கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. அதற்கு முதல்நாளே, சாத்தனூர் அணையின் நீர்மட்டம் அதிகரிக்கும் என்பதால், நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியது. ஆனால், திராவிட மாடல் அரசு, அதை செய்யாமல் குறட்டை விட்டு உறங்கிவிட்டது. முன்னறிவிப்பு இன்றி சாத்தனூர் அணையை திறந்தது தான் பாதிப்புக்கு காரணம் என குற்றம்சாட்டினால், நாங்கள் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை செய்தோம் என தமிழக அரசு கூறுகிறது.
நள்ளிரவில் செய்யப்பட்ட எச்சரிக்கை மக்களை சென்றடையவில்லை. நவ.,29 ல் இருந்து சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 30 -50 ஆயிரம் வரை கன அடி தண்ணீர் திறந்துவிட்டு இருந்தால், இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. ஆனால், அதை செய்ய தவறியதால் வெள்ளத்தை தடுக்க வேண்டிய அரசு, வெள்ளத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளம் ஏற்பட்ட பிறகும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட உதவிகளை கூட அரசு செய்யவில்லை. அதனால், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளை முற்றுகையிட முயற்சி நடக்கிறது.
மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பதிலும், கையாள்வதிலும் படுதோல்வி அடைந்துவிட்ட தமிழக அரசு, இப்போதும் கூட அதன் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மாறாக அனைத்து பணிகளும் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற மாயை ஏற்படுத்தும் முயற்சியில் தான் ஈடுபட்டு இருக்கிறது. இத்தகைய மாயைகளினால், மக்களின் கோபத்தையும் துயரத்தையும் போக்க முடியாது. தமிழக மக்கள், சரியான நேரத்தில் சரியான வகையில் தி.மு.க., அரசுக்கு சரியான பாடத்தை புகட்டுவார்கள்.
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது போன்ற செயல்களை அனுமதிக்க முடியாது. அனுமதிக்கவும் கூடாது. ஜனநாயகத்தில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பல வழிமுறைகள் உள்ளன. அவற்றை விடுத்து எவரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. அதேநேரத்தில், இதுபோன்ற செயல்கள் எப்படி நடக்கின்றன என்பதை அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.உணவு, தண்ணீர் இல்லாமல், மக்கள் அவதிப்படும்போது, அதனை போக்க அமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டம், அகரம்பள்ளிப்பட்டியில் ரூ.16 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அண்மையில் திறக்கப்பட்ட பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதை ஏற்கமுடியாது. இதற்கான காரணம் அறிய விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.