ஆறு மாதத்தில் மக்கள் முடிவுரை எழுதுவர் தி.மு.க. மீது அண்ணாமலை சாடல்
ஆறு மாதத்தில் மக்கள் முடிவுரை எழுதுவர் தி.மு.க. மீது அண்ணாமலை சாடல்
ADDED : அக் 02, 2025 01:43 AM

சென்னை: 'இன்னும் ஆறு மாத காலத்தில், தி.மு.க.வின் அராஜகத்திற்கு மக்கள் முடிவுரை எழுதுவர்' என, அண்ணாமலை சாடியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் பட்டியல் சமூகத்தினர், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கடந்த 2023ம் ஆண்டு மட்டும், 201 முதியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்; இது, நாட்டிலேயே மிக அதிகம். மேலும், வயது முதியவர்களுக்கு எதிராக, 2,104 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு, நாட்டில் நான்காவது இடத்தில் தமிழகம் இருக்கிறது.
இது தவிர, தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, கடந்த 2020ம் ஆண்டு, பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக 1,294 குற்றங்கள் நடந் துள்ளன.
தற்போது வெளியாகியுள்ள, 2023ம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, 1,921 குற்றங்கள் பதிவாகி உள்ளன. பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள், தி.மு.க. ஆட்சியில், 50 சதவீதம் அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது. மேலும், குழந்தைகளுக்கு, எதிரான குற்றங்களும், தி.மு.க. ஆட்சியில் மிகவும் அதிகரித்திருக்கிறது.
தமிழகம் முழுதும் சட்டம் ஒழுங்கு நிலைமை இத்தனை மோசமாக இருக்கும் நிலையில், எதிர்க்கட்சியினரை பழிவாங்கவும், தி.மு.க., ஆட்சி மீது விமர்சனம் வைப்பவர்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கவும் மட்டுமே காவல்துறையை முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தி வருகிறார். காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளை, தி.மு.க., நிர்வாகிகள் போல பயன்படுத்தி, அரசு துறைகள் அனைத்தையுமே செயலிழக்க செய்துவிட்டனர்.
ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சியில், தமிழகம், 50 ஆண்டுகள் பின்னோக்கி போய்விட்டது என்பதுதான் உண்மை நிலை. ஆடிக்கொள்ளுங்கள்.
இன்னும் ஆறு மாத காலம். உங்கள் அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுளை எழுதுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.