மாற்றுத்திறனாளிகள் வாழ்வியலில் மாற்றம் கொண்டு வரலாம்: டிச., 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினம்
மாற்றுத்திறனாளிகள் வாழ்வியலில் மாற்றம் கொண்டு வரலாம்: டிச., 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினம்
ADDED : டிச 03, 2025 07:33 AM

மதுரை: ''உடல் பருமன் பிரச்னையால் மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது உடல் சமநிலையை இழக்க வைக்க செய்யும். பிசியோதெரபி மருத்துவர்களின் வழிகாட்டுதலோடு இதற்கு தீர்வு காண முடியும்,'' என, இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபிஸ்ட்கள் சங்கம், தமிழ்நாடு கிளை தலைவர் மருத்துவர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அவர் கூறியதாவது: உலக மக்கள் தொகையில் 1.3 மில்லியன் பேரில் 16 சதவீதம் பேர் ஒரு வகையான மாற்றுத்திறனுடன் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் இயக்க தடையுடன் அல்லது தினசரி செயல்பாடுகளில் சவால்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இதில் மாற்றுத்திறனாளிகள் குறிப்பாக நரம்பியல் குறைபாடுகள், தசை பலவீனம், மூட்டு பிரச்னை உள்ளவர்கள் கீழே விழுவதற்கான அபாயம் அதிகம். தசை பலவீனம், உடல் சமநிலை குறைவு, நடையில் மாற்றம், உணர்வு குறைபாடு, பல மருந்துகளை உட்கொள்ளும் கட்டாயம் ஆகியவை கணக்கில் கொள்ளப்பட வேண்டியவை.
பக்கவாதம், முதுகுத்தண்டுவட நோயாளிகள், திடீர் தசை தளர்வு போன்ற காரணங்களால் கீழே விழுவதற்கான வாய்ப்பு அதிகம். அவர்கள் பயன்படுத்தும் வீல்சேர் சரியான பராமரிப்பு இல்லாதது, நடை உதவி சாதனங்கள் அவரவர் உயரத்திற்கு ஏற்றவாறு இல்லாமல் இருப்பதும் விழுவதை அதிகப்படுத்துகிறது.
இதற்கான தீர்வுகள்
இதற்கு தீர்வாக பிசியோதெரபி மருத்துவர்களின் வழிகாட்டுதலோடு அரசு சார்பில் மாநில அளவிலான எடை மேலாண்மை, வாழ்வியல் மாற்றங்கள் குறித்த திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அரசு, தனியார் சுகாதார திட்டங்களில் பிசியோதெரபி மருத்துவம், நடை உதவி சாதனங்களுக்கு இன்சூரன்ஸ் மூலம் பயன் பெறும் திட்டம் வேண்டும்.
மேலும் சமநிலை பயிற்சி, தசையை வலுப்படுத்தும் பயிற்சிகள், நடை உதவி சாதனங்களின் உதவியுடன் நடை பயிற்சி போன்ற வசதிகளால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியலில் மாற்றங்களை கொண்டு வரலாம். உடல் பருமன் பிரச்னையால் மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது உடல் சமநிலையை இழக்க வைக்க செய்யும்.
மாற்றுத் திறனாளிகள் விழுவது குறித்த டேட்டாவை மருத்துவமனைகள் மூலம் மத்திய, மாநில அரசுகள் சேகரிக்க வேண்டும். அதில் நடை உதவி சாதனங்கள் திருத்தாய்வு செய்யப்பட்டது குறித்த தகவல்கள் ஆண்டுதோறும் அளவிடப்பட வேண்டும். அரசு, தனியார், சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட்டால் விழுவதால் ஏற்படும் காயங்களில் இருந்து கணிசமாக தடுத்து மாற்றுத்திறனாளிகளது வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும். இவ்வாறு கூறினார்.

