ADDED : பிப் 13, 2024 07:10 AM

சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சட்டசபை தொகுதி வாரியாக, 'என் மண்; என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர், 200வது தொகுதியாக, சென்னை துறைமுகத்தில் யாத்திரை மேற்கொள்ள இருந்தார்; போலீஸ் அனுமதி தரவில்லை.
எனவே, அந்த தொகுதிக்கு உட்பட்ட தங்கசாலையில் இம்மாதம் 11ம் தேதி இரவு பொதுக்கூட்டம் நடந்தது. பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அண்ணாமலை ஆகியோர், திறந்தவெளி வேனில் ஊர்வலமாக பொதுக்கூட்ட மேடைக்கு வந்தனர்.
சென்னையில் யாத்திரைக்கு போலீசார் அனுமதி தராததால், சட்டசபை தொகுதிகளில் மக்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சியை அண்ணாமலை நடத்த உள்ளார்.
இன்று (பிப்., 13) தண்டையார்பேட்டை அருகில்,பா.ஜ.,வின் வடசென்னை லோக்சபா தொகுதி தேர்தல் அலுவலகத்தை அண்ணாமலை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, அவர், அந்த பகுதியில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார்.
இதேபோல, மற்ற தொகுதிகளிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை அண்ணாமலை நடத்த உள்ளார்.