'மக்கள் வரிப்பணம் இஸ்லாமியருக்கு மட்டுமே!': ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
'மக்கள் வரிப்பணம் இஸ்லாமியருக்கு மட்டுமே!': ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
ADDED : பிப் 28, 2025 05:54 AM

திருப்பூர் : மதச்சார்பின்மை பேசி கொண்டு மதத்தின் அடிப்படையில் ஒருதலைபட்சமாக தமிழக அரசு செயல்படுவதாக, ஹிந்து முன்னணி குற்றஞ்சாட்டி உள்ளது.
இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
இந்தாண்டு ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு என, 7,920 மெட்ரிக் டன் தரமான பச்சரிசியை மசூதிகள், தர்காக்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது, இதுவரை அளித்ததை விட, 30 சதவீதம் அதிகம். வரும் 2026 தேர்தலுக்கு, இஸ்லாமியர் ஓட்டுகளை குறிவைத்து மக்கள் வரிப்பணத்தை தி.மு.க., வாரி இறைத்துள்ளது.
ஹிந்துக்கள், ஆடி மாதத்தில் ஒவ்வொரு அம்மன் கோவிலிலும் எளிய மக்கள் முதல் அனைவரும் கூழ் வார்த்தல் செய்கின்றனர். அதற்கு உதவி செய்ய தமிழகத்தை ஆண்ட கட்சிகளுக்கு மனமில்லை. ரம்ஜான் நோன்பிற்கு தரும் அரிசியை, மசூதிகளுக்கு ஏன் தர வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இதை ஏன் ரேஷன் கடைகளில் நேரடியாக இஸ்லாமிய மக்களுக்கு வழங்கக்கூடாது? மதவாதத்தை ஊக்குவிக்க, தமிழக அரசு துணை போகிறதா என்ற கேள்வி எழுகிறது.
தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் கோவில் திருப்பணிகளுக்காக 1,000 கோடி ரூபாய், தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்து, நான்கு ஆண்டுகள் முடிந்து, அதன் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதுவரை கோவில் திருப்பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கியதா?
மதச்சார்பற்ற அரசு என பேசி கொண்டு, மதத்தின் அடிப்படையில் தி.மு.க., அரசு பாரபட்சமாக செயல்படுவதை கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

