பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் வெள்ளோட்டத்திற்கு தயார்
பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் வெள்ளோட்டத்திற்கு தயார்
ADDED : பிப் 22, 2024 02:54 AM
மதுரை:மதுரை மாநகராட்சி மக்களுக்கு குழாய் வாயிலாக குடிநீர் வினியோகிக்க 1,685 கோடி ரூபாய் மதிப்பிலான பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நிறைவடைந்து தற்போது வெள்ளோட்டத்திற்கு தயார் நிலையில் உள்ளது. இதையொட்டி, இன்று அதிகாரிகள் குழு பார்வையிடுகிறது.
'அம்ரூத் 3'
மதுரை மாநகராட்சியில் உள்ள 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு தினம் 371 எம்.எல்.டி., குடிநீர் தேவை. ஆனால் தற்போது வைகை அணை, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டங்களில் இருந்து 190 எம்.எல்.டி., குடிநீர் மட்டும் கிடைக்கிறது.
குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் 'அம்ரூத் 3' திட்டத்தில் 1685.76 கோடியில் முல்லை பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலம் மதுரைக்கு நேரடியாக குடிநீர் கொண்டு வரும் திட்டப் பணிகள் 5 பகுதிகளாக நடந்து முடிவடைந்துள்ளது.
வழித்தடம்
முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் தடுப்பணை, ஆற்று நீரேற்று நிலையம் அமைத்து, பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையம் வரை 96 கிலோ மீட்டருக்கு சுத்திகரிக்கப்படாத நீர் கொண்டுவரப்பட்டு, பண்ணைப்பட்டியில் 125 எம்.எல்.டி., குடிநீர் சுத்திகரிக்கப்படுகிறது.
அங்கிருந்து மதுரைக்கு 55.44 கிலோ மீட்டர் துாரம் குழாய்கள் பதிக்கப்பட்டும், 37 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள், ஒரு தரைமட்ட தொட்டி மூலமாகவும் கொண்டு வரப்படுகிறது.
இதற்கான பணிகள் முடிவடைந்துள்ளன. மதுரையில் 100 வார்டுகளிலும் குழாய்கள் பதிக்கும் பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்திற்கு மின் இணைப்பு பணிகள் முடிவுறாததால் ஜெனரேட்டர் மூலம் அறிவிக்கப்படாத வெள்ளோட்டப் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
மின் இணைப்பு வழங்குவதற்காக சென்னையில் உள்ள அதிகாரிகள் குழு இன்று பெரியாறு அணை பகுதி பணிகளை ஆய்வு செய்கிறது. இக்குழுவுடன் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் உடன் செல்கின்றனர்.