தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி
தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி
ADDED : ஆக 21, 2011 01:58 AM
சென்னை : தனியார் தொழிற் கல்லூரிகளின் கண்காணிப்புக் குழு நடத்திய கூட்டத்தில், நடப்பு கல்வியாண்டில், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ், மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, தனியார் தொழிற் கல்லூரிகளின் கண்காணிப்புக் குழு வெளியிட்ட அறிக்கை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, தமிழகத்தில் தனியார் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழிற் கல்வி கல்லூரிகளில், மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த, தமிழக அரசிற்கு உத்தரவிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி அப்துல் ஹாதி தலைமையில், கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் சார்பில், கடந்த மாதத்தில் தனியார் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், கூட்டமைப்புகள், சங்கங்கள் ஆகிய குழுக்களின் பிரதிநிதிகளை அழைத்து, நிர்வாக ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது.
இதற்கிடையில் நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முடிவில், தனியார் மருத்துவ தொழிற் கல்வி கல்லூரிகளுக்கு, நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ், மாணவர் சேர்க்கைப் பணியினை மேற்கொள்ள, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்குழுவின் நிலைப்பாட்டைப் பின்பற்றாமல், தன்னிச்சையாக மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.