திருவிழாவிற்கு அனுமதி: முடிவெடுக்காமல் பெஞ்ச் தேய்த்தால் போலீசாரே செலவை ஏற்க வேண்டும் ஐகோர்ட் உத்தரவு
திருவிழாவிற்கு அனுமதி: முடிவெடுக்காமல் பெஞ்ச் தேய்த்தால் போலீசாரே செலவை ஏற்க வேண்டும் ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஆக 07, 2025 09:23 AM

சென்னை: 'கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் மீது, உரிய காலத்துக்குள் முடிவெடுக்காமல், ஏற்பாட்டாளர்களை நீதிமன்றத்தை நாடச் செய்தால், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியே திருவிழா செலவுகளை ஏற்க வேண்டியது வரும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கோவை மாவட்டம் பாப்பம்பட்டியில் வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆகஸ்ட் 12ம் தேதி வரை ஆடி பெருந்திருவிழா நடத்தவும், ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி கோரியும், பாதுகாப்பு வழங்கக் கோரியும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், சூலுார் காவல் நிலைய இன்ஸ்பெக்டரிடம் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில், 'கடந்த ஜூலை 7ம் தேதி அளித்த விண்ணப்பம், இதுவரை பரிசீலிக்கப் படவில்லை' எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுரேஷ்குமார் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை, நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வி.எஸ்.உஷாராணி, காவல் துறை தரப்பில் வழக்கறிஞர் பிரதாப் ஆகியோர் ஆஜராகினர்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
அனுமதி கோரி, ஜூலை 7ல் விண்ணப்பம் செய்துள்ளார். அதன் மீது, இதுவரை உரிய உத்தரவு பிறப்பிக்கவில்லை. எனவே, திருவிழாவுக்கு தகுந்த நிபந்தனைகளுடன், சூலுார் போலீசார் அனுமதி வழங்க வேண்டும். எதிர்காலத்தில் கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பங்களை பெற்றால், அவற்றை ஏழு நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை பரிசீலிக்காமல், கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடச் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக, மாவட்ட எஸ்.பி.,க்கள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுபோன்ற கோவில்கள், சொற்ப நிதியை வசூலித்து, பூஜைகள், திருவிழாக்களை நடத்துகின்றன. விழாக்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்காததால், வசூலித்த தொகையை வழக்குக்கு செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால், கோவில் திருவிழா செலவை, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் ஏற்க வேண்டி வரும். விழா நடக்கும் நாட்களில், உரிய பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும். இம்மனு முடித்து வைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.