திருப்பரங்குன்றம் மலை தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவுக்கு அனுமதி
திருப்பரங்குன்றம் மலை தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவுக்கு அனுமதி
ADDED : டிச 19, 2025 04:45 AM

திருமங்கலம்: திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா சந்தனக்கூடு 2026 ஜன., 6ல் நடக்க உள்ளது. டிச., 21ல் மலை மேல் ஏற்றப்படும் மரத்திலான கொடியேற்றத்திற்கான ஊர்வலம் நடக்க உள்ளது.
இதற்கான அமைதிக் கூட்டம் திருமங்கலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., சிவஜோதி தலைமையில் நடந்தது. இதில் திருப்பரங்குன்றம் கோயில் உதவி ஆணையாளர் சசி பிரியா, தாசில்தார் கவிதா, தர்கா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் சார்பில் 2026 ஜனவரி 6 ல் நடக்க உள்ள சந்தனக்கூடு திருவிழா, 2025 டிசம்பர் 21ல் திருப்பரங்குன்றம் மலை மேல் ஏற்றப்படும் மரத்திலான கொடியேற்ற நிகழ்வுக்கு, கடந்த ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட நிபந்தனைகளை இந்த ஆண்டும் கடைபிடிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. வழக்கமான வீதிகளில் ஊர்வலம் செல்லும் போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படா வண்ணம் திருவிழாவினை நடத்த வேண்டும்.
புதிய நடைமுறைகளை ஏற்படுத்தவோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடிகளை வெடித்தலோ கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் பட்சத்தில் தர்கா நிர்வாகத்தினர் முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

