காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி
காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி
UPDATED : ஜன 10, 2025 07:10 PM
ADDED : ஜன 10, 2025 02:04 PM

சென்னை: பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என சட்டசபையில் வனத்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்தார்.
இது குறித்து அவர் சட்டசபையில் பேசியதாவது: பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. காப்புக்காடுகளில் இருந்து 1 முதல் 3 கி.மீ. தொலைவுக்குள் காட்டுப்பன்றி வந்தால் பிடித்து திரும்பவும் வனத்துக்குள் விட வேண்டும். 3 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் காட்டுப்பன்றி வரும் பட்சத்தில் வனத்துறையினருக்கு சுட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் பன்றிகளை துப்பாக்கியால் சுடுவது குறித்து வருங்காலங்களில் பரிசீலிக்கப்படும்.
வனவிலங்குகள் எவை எவை என அறிவிப்பது மத்திய அரசு தான். வன விலங்கு பட்டியலில் காட்டுப் பன்றி உள்ளது. அதை நீக்குவது எளிதல்ல. மத்திய அரசின் வனவிலங்கு அறிவிப்பு பட்டியலில் இருந்து காட்டு பன்றியை விலக்குவது சாதாரணமானது அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.