ADDED : செப் 25, 2026 03:22 AM
சென்னை: எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களிடம், தேர்தல் செலவை வசூலிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வோரிடம், தேர்தல் செலவை வசூலிக்கும் முறையை வகுக்கும்படி, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர், பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு முடியும் வரை, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கும்படியும் கோரியிருந்தார்.
இந்த வழக்கில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்களிடம் இருந்து, தேர்தல் செலவை வசூலிப்பது; அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது தொடர்பாக, தகுந்த உத்தரவை பிறப்பிக்கக் கோரும் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது.
ஏற்கனவே உள்ள சட்டங்களை மட்டுமே நீதிமன்றத்தால் விளக்கவோ அல்லது செயல்படுத்தவோ முடியும்.
இது, சட்டசபை கொள்கை சார்ந்த விவகாரமே தவிர, நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது அல்ல. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் சட்டம் இயற்றுமாறு, சட்டசபைக்கு உத்தரவிட முடியாது.
நிர்வாகம் அல்லது சட்டசபையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவற்றை, நீதிமன்றம் தன் நீதித்துறை உத்தரவாக மாற்ற முடியாது. வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரிக்கிறோம்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
