முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
ADDED : ஏப் 22, 2025 10:41 PM
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை தயாரிப்பு நிறுவனம் அமைந்துள்ள நிலத்தை, தன் அடியாட்கள் வாயிலாக அபகரித்து, தன் மருமகனான நவீன்குமார் என்பவருக்கு கொடுத்ததாக, மகேஷ் என்பவர் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித் திட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கு எதிராக ஜெயக்குமார் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜெயகுமாருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பவம் 2016ல் நடந்தது. ஆனால், இது தொடர்பான வழக்கு 2021ல் தான் பதிவு செய்யப்பட்டது; காரணம் அ.தி.மு.க., ஆட்சி நடந்து கொண்டிருந்ததால், அப்போது அமைச்சராக இருந்த ஜெயக்குமாருக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. மகேஷ் பலமுறை புகார் அளித்தும், போலீஸ் தரப்பில் வழக்குப்பதிவு செய்யவில்லை. ஜெயகுமார், தன் அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியது மட்டுமில்லாமல், சட்டவிரோத செயலிலும் ஈடுபட்டுள்ளார்' என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டது போல் தெரிகிறது. சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில், நாங்கள் தலையிட விரும்பவில்லை. எனவே, ஜெயக்குமாருக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டனர்.
- - டில்லி சிறப்பு நிருபர் -