ADDED : அக் 02, 2024 01:08 AM
சென்னை:விவசாய மின் இணைப்பு கோரி, தமிழகம் முழுதும் மின் வாரிய அலுவலகங்களில், விவசாயிகள் மனு அளித்தனர்.
தமிழகத்தில், விவசாய பயன்பாட்டிற்கு, 23.56 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இதற்கான கட்டணத்தை, மின் வாரியத்திற்கு தமிழக அரசு வழங்குகிறது. இதனால், அரசு அனுமதிக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒவ்வொரு ஆண்டும் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, கடந்தாண்டு தட்கல் திட்டத்தின் கீழ், 50,000 இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், 20,000 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளன. கால அவகாசம் முடிந்தும் மின் இணைப்புகளை வழங்காமல், வாரியம் அலட்சியம் காட்டி வருகிறது.
இந்நிலையில், தமிழக விவசாய பாதுகாப்பு சங்கம் சார்பில், மாநிலம் முழுதும் உள்ள 12 மின் வாரிய மண்டல தலைமை பொறியாளர் அலுவலகங்களில், இணைப்பு கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது. இதில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
பல அலுவலகங்களில் தலைமை பொறியாளர்கள் இல்லாததால், அங்கிருந்த அலுவலர்களிடம் மனு அளித்தனர்.