ADDED : ஜன 12, 2024 10:09 PM
புதுடில்லி:மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உடனடியாக நிவாரண தொகையை விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:
மிக்ஜாங் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான வீடுகள், வாகனங்கள் நீரில் மூழ்கின.
புயல் பாதிப்பை சரி செய்யும் விதமாக, தமிழகத்துக்கு 8,000 கோடி ரூபாயை நிவாரணமாக ஒதுக்கீடு செய்ய, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
அதில் 3,000 கோடி ரூபாயை அவசர சூழலை சமாளிக்க உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் தீபாங்கர் தத்தா அடங்கிய அமர்வு, 'இந்த விவகாரத்தை தமிழக அரசு பார்த்துக் கொள்ளும். நாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை'எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.