ADDED : ஆக 03, 2025 02:58 AM
கிறிஸ்துவ மத போதகர் தாக்கப்பட்ட வழக்கில் தி.மு.க., முன்னாள் எம்.பி., ஞான திரவியம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த மத போதகர் கார்பரே நோபல். இவரை, 2023ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி தி.மு.க.,வை சேர்ந்த லோக்சபா முன்னாள் எம்.பி., ஞான திரவியத்தின் ஆதரவாளர்கள் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.
ஞானதிரவியம் உட்பட, 33 பேருக்கு எதிராக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையில், அதை ரத்து செய்யக் கோரியும், வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை கோரியும், உச்ச நீதிமன்றத்தில் ஞான திரவியம் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய மறுத்ததுடன், மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கவும் மறுத்துவிட்டது. வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
-டில்லி சிறப்பு நிருபர்-