போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டு வீச்சு; குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்!
போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டு வீச்சு; குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்!
UPDATED : பிப் 04, 2025 02:12 PM
ADDED : பிப் 03, 2025 11:52 AM

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மீது நேற்று நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய சிறுவனை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். காயம் அடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மீது பைக்கில் முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் இரண்டு பேர் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பியோடினர். இரும்பு கேட் பூட்டப்பட்டு இருந்ததால் அதன் மீது பெட்ரோல் குண்டு விழுந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.இந்நிலையில் குண்டு வீசிய சிறுவனை போலீசார் இன்று சுட்டுப்பிடித்துள்ளனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் போலீஸ் அதிகாரி ஒருவரும் காயம் அடைந்துள்ளார்.
இதற்கிடையே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. என்ன தான் நடக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில்? ஒரு ஏடிஜிபி, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதாக சொல்வதும், போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதும் தான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா?
நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், இப்படி ஒரு தறிகெட்ட ஆட்சி நடத்திவிட்டு, 'சட்டம் ஒழுங்கை சிறப்பாக தான் நடத்தி வருகிறேன்' என்று வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச முதல்வர் ஸ்டாலின் வெட்கமாக இல்லையா?
போலீஸ் ஸ்டேஷன் கூட பாதுகாப்பான இடம் இல்லை' என்ற நிலைக்கு சட்டம் ஒழுங்கைப் படுபாதாளத்திற்கு தள்ளிவிட்ட ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
இதுவே சாட்சி!
பா.ம.க., தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: ராணிப்பேட்டை போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறி உள்ளது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி. தமிழகத்தில் கொடூரமான குற்றங்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. எந்தக் குற்றம் நடந்தாலும் அது தொடர்பாக யாரையாவது கைது செய்து கணக்குக் காட்டுவதையும், அதையே அரசின் சாதனையாக காட்டிக் கொள்வதையும் தான் திராவிட மாடல் அரசு வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறது.
இத்தகைய நாடகங்களின் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது. ஸ்காட்லாந்துயார்டு போலீசாருக்கு இணையானதாக கூறப்பட்ட தமிழக போலீசாரின் வீழ்ச்சிக்கு திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

