கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடிக்கு 10 ஆண்டு சிறை
கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடிக்கு 10 ஆண்டு சிறை
UPDATED : நவ 12, 2025 05:28 PM
ADDED : நவ 12, 2025 05:25 PM

சென்னை: கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி 'கருக்கா' வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த, 2023, அக்., 25ல், சென்னை கிண்டியில் உள்ள, கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக, கிண்டி போலீசார், நந்தனம் எஸ்.எம்.நகரைச் சேர்ந்த ரவுடி கருக்கா வினோத், 42, என்பவனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
இவனின் பின்னணியில் பயங்கரவாதிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் இந்த வழக்கு, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்கள், கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். இவன் மீது, 680 பக்கத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில், வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவும், தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

