பணி நிரந்தரம் செய்யக்கோரி மருந்தாளுனர்கள் போராட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி மருந்தாளுனர்கள் போராட்டம்
ADDED : பிப் 29, 2024 11:50 PM

சென்னை:ஒப்பந்த அடிப்படையில், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருவோருக்கு பணி நிரந்தரம் கோரி, 200க்கும் மேற்பட்ட மருந்தாளுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், ஒருங்கிணைந்த தமிழ்நாடு ஆர்.பி.எஸ்.கே., மருந்தாளுனர் சங்கத்தினர், 200க்கும் மேற்பட்டோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பணி நிரந்தரம் கோரி, அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதுகுறித்து, அச்சங்கத்தின் செயலர் ராஜேஷ் கூறியதாவது:
தேசிய சிறார் நலத்திட்டத்தின் கீழ், 770 மருந்தாளுனர்கள் பணியமர்த்தப்பட்டு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக முறையில் பணியாற்றி வருகிறோம்.
கடந்த 2015ல், அரசாணை 335ன்படி பணி நிரந்தரமும் வழங்கப்படவில்லை. மாதம், 15,000 ரூபாய் மட்டுமே தொகுப்பூதியம் பெற்று வருகிறோம்.
எம்.ஆர்.பி., வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்கள், பணி நிரந்தரம் செய்வதைபோல், எங்களையும் பணி நிரந்தரம் செய்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். அதற்கான கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

