2ம் கட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வாக்குறுதி
2ம் கட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வாக்குறுதி
ADDED : செப் 12, 2025 11:18 PM

திருப்பூர்: ''பவானி ஆற்றில் கூடுதல் தடுப்பணை கட்டி, 2ம் கட்ட 'அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படும்,'' என, அ.தி.மு.க., பொதுசெயலாளர் பழனிசாமி பேசினார்.
திருப்பூரில் நேற்று நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், விவசாயிகள் மத்தியில், பழனிசாமி பேசியதாவது:
அத்திக்கடவு - அவிநாசி திட்டம், 60 ஆண்டுகளாக பரிசீலனையில் இருந்து வந்தது. மலையை குடைந்து பாதை அமைக்க வேண்டும்; தொட்டி பாலம் ஏற்படுத்த வேண்டும் என, பல்வேறு சவால் இருந்தது. ஓய்வு பெற்ற பொறியாளர் குழு அமைத்து அறிக்கை பெறப்பட்டது. அப்போது, 'சாத்தியமற்ற திட்டம்' என்றுதான் அறிக்கை கொடுத்தனர். திட்ட அறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கியிருந்த நிலையில், பிறகுதான் மாற்றுத்திட்டம் உருவானது. காளிங்கராயன் வாய்க்காலில் இருந்து தண்ணீர் எடுக்கும், அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தினோம்.
முழுவதும் மாநில அரசு நிதியில் செயல்படுத்திய, அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில், ஏழு 'செக்டேம்' கட்ட, தலா 20 முதல், 23 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தோம்; இதுவரை, மூன்று 'செக்டேம்' மட்டுமே கட்டப்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றத்தால் பல பணிகள் கைவிடப்பட்டன.திட்டம் வருவது முக்கியமல்ல; திட்ட பணிகள் முழுமை பெற்றால் மட்டுமே, மக்களுக்கு உரிய பலன் கிடைக்கும். புதிய குளம், குட்டைகளை இணைத்து,2ம் கட்ட, அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை, அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றுவோம்.ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க, மேட்டுப்பாளையம் உட்பட, பவானி ஆற்றில் கூடுதல் தடுப்பணைகள் கட்டி, 2ம் கட்ட அவிநாசி - அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படும்.
'நடந்தாய் வாழி காவேரி' பவானி, நொய்யல், அமராவதி ஆகிய துணை ஆறுகளுக்கும் சேர்த்துத்தான், 'நடந்தாய் வாழி' காவேரி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து, பிரதமரிடம் பேசி, அதிகபட்ச நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரி மற்றும் துணை ஆறுகளில், கழிவுநீர் கலக்காமல் பாதுகாக்கப்படும். சுத்திகரிப்பு செய்து ஆற்றில் விடும் கட்டமைப்பு உருவாக்கப்படும்.
பிரதமரிடம் நாங்கள் வலியுறுத்தி வந்ததால், 'நடந்தாய் வாழி' திட்டத்துக்கு, 11 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, 60 சதவீதம்; மாநில அரசு, 40 சதவீத பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக, தமிழக அரசு, ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.நதிகள் எவ்வகையிலும் மாசுபடாமல் இருக்க வேண்டும்; குறிப்பாக, காவிரியும், துணை ஆறுகளும் மாசுபடாமல் சுத்தமாக இருப்பதற்கான, திட்டங்கள், அ.தி.மு.க., ஆட்சி வந்த பின் வேகப்படுத்தப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.