பள்ளிகளில் இனி வாரத்திற்கு 3 நாட்கள் உடற்கல்வி வகுப்பு
பள்ளிகளில் இனி வாரத்திற்கு 3 நாட்கள் உடற்கல்வி வகுப்பு
UPDATED : அக் 13, 2026 07:31 PM
ADDED : அக் 13, 2026 07:16 PM
சென்னை: ‘‘தமிழக பள்ளிகளில், இனி வாரத்திற்கு 3 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்படும்,’’ என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், பள்ளிக் கல்வித் துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம், அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் நேற்று நடந்தது.
அதில், நீதி நெறி வகுப்புகள் தொடர்பாகவும், வகுப்பறை, கழிப்பறை உட்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளிக் கல்வி திருத்த கால அட்டவணையை, அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:
முதல்வர் விஜய் உத்தரவின்படி, பள்ளிகளில் வாரத்தில் 3 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் நடத்துவதற்கான திருத்திய கால அட்டவணை வெளியிடப்படுகிறது. வாரத்தில், 3 நாட்கள் உடற்கல்வி வகுப்பு மற்றும் மற்ற இரண்டு நாட்கள், கலை மற்றும் கல்வி இணை செயல்பாடு வகுப்புகள் நடத்தப்படும்.
அந்த நாட்களிலும் உடற்கல்வி வகுப்புக்களை நடத்தலாம். இந்த உடற்கல்வி வகுப்புகளை, ஆசிரியர்கள் யாரும் ரத்து செய்ய கூடாது. விளையாட்டில் பங்கேற்க மாணவ, மாணவியரை ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டில், மாணவர்களிடையே ஜாதி, மதம், நிறம் ஆகியவற்றை காண்பிக்க கூடாது. எந்த மாணவர்களையும் ஒதுக்கி வைக்க கூடாது.
பள்ளிக் கல்வித்துறை பொறுப்பு இயக்குநராக லதா செயல்பட்டு வருகிறார். பள்ளிக் கல்வித் துறை செயலராக இன்னசென்ட் திவ்யா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக ஜெயந்தி என, கல்வித் துறையில் சிங்கப் பெண்களாக இருக்கின்றனர். விரைவில், பள்ளிக் கல்வித் துறைக்கு புதிய இயக்குநர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
