தினமும் 70 லட்சம் லிட்டர் பால் கையாள திட்டம்! தமிழக பால் வளத்துறை அமைச்சர் தகவல்
தினமும் 70 லட்சம் லிட்டர் பால் கையாள திட்டம்! தமிழக பால் வளத்துறை அமைச்சர் தகவல்
ADDED : நவ 21, 2025 07:20 AM

கோவை: ''தமிழகம் முழுக்க ஆவின் நிறுவனங்களில் நாளொன்றுக்கு, 70 லட்சம் லிட்டர் பாலை கையாள இலக்கு நிர்ணயித்துள்ளோம், அதில் வெற்றி காண்போம்,'' என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
பால் வெண்மை புரட்சியின் தந்தை வர்கீஸ்குரியனின் பிறந்த நாளான நவ.,- 26 தேசிய பால் தினமாக கொண்டாடப்படுகிறது. கோவை ஆர்.எஸ்.புரம் ஆவின் விற்பனை அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் பேசியதாவது:
கடந்த நிதி ஆண்டில் கோவை ஆவின் நான்கு கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. இந்த வருவாயை கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு தீவனம் வழங்குவதற்கு ஒதுக்கீடு செய்யலாம் என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
அதே சமயம், 15 சதவீதம் மின்சார செலவை குறைத்து, 48 லட்சம் ரூபாயை சேமித்துள்ளோம். ஆவின் வருவாயிலிருந்து, 1,250 கோடி ரூபாய்க்கு பால் துறை சார்ந்த கால்நடை வளர்ப்பு சார்ந்த கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
நிர்வாக செலவினங்களை குறைத்து, ஒழிவு மறைவின்றி ஆவின் சிறப்பாக செயல்படுகிறது. புரதம் நிறைந்த கால்நடை தீவனம் மும்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. 374 புதிய பால் குளிர்விப்பான்கள் நிறுவி குளிர்விக்கும் திறன் 19.16 லட்சத்திலிருந்து 32.16 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுக்க ஆவின் நிறுவனங்களில் நாளொன்றுக்கு, 70 லட்சம் லிட்டர் பாலை கையாள இலக்கு நிர்ணயித்துள்ளோம், அதில் வெற்றி காண்போம்.
நான்கு சதவீத வட்டி மானியத்துடன், ஐந்தாயிரம் மினி பால்பண்ணைகள் துவங்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அமைச்சர் பேசினார்.
மூன்று சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கும், சிறந்த கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கும், மொத்த குளிரூட்டும் நிலையங்களுக்கும் கேடயம் வழங்கப்பட்டது. ஆவின் பொதுமேலாளர் லதா, கூட்டுறவு சார்பதிவாளர் சபரிநாதன், துணை பொதுமேலாளர் பிரேமா, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், மாடு வளர்ப்போர் பங்கேற்றனர்.
ஆவின் பாலில் கலப்படமா
தார்மீக பொறுப்பு ஏற்கிறேன்!
கி ணத்துக்கடவு பகவதிபாளையத்தில் உள்ள தொகுப்பு பால் குளிர்விப்பு நிலையத்தில் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், பங்கேற்ற பால் வளத்துறை அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது: விவசாயிகள் எவ்வளவு பால் உற்பத்தி செய்தாலும், அதை ஆவின் வாயிலாக ஆண்டு முழுவதும் ஒரே சீரான விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆவினை தவிர மற்ற நிறுவனங்களின் பால் விற்பனை விலை அதிகமாகவே உள்ளது. கடந்த காலங்களில் சொசைட்டி வாயிலாக உள்ளூர் பால் விற்பனை செய்வதை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. தற்போது, கிராமப்புறங்களில் உள்ள சொசைட்டி வாயிலாக பால் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், ஒரு சிலர் ஆவின் நிறுவனத்தில், கலப்பட பால் விற்பனை செய்யப்படுவதாக அவதூறு பரப்புகின்றனர். ஆவின் பாலில் கலப்படம் இருந்தால் நான் தார்மீக பொறுப்பு ஏற்கிறேன். தற்போது ஆவினில் தரக்கட்டுப்பாடு, பகுப்பாய்வு கருவிகள் என பல கட்டத்தை கடந்தே, மக்களுக்கு பால் வினியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு, கூறினார்.

