கிராமப்புற கழிவு மேலாண்மை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்
கிராமப்புற கழிவு மேலாண்மை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்
UPDATED : அக் 08, 2026 06:41 PM
ADDED : அக் 08, 2026 06:37 PM
சென்னை: நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள உள்ளாட்சிகளின் கழிவு மேலாண்மையை தனியாரிடம் ஒப்படைக்க, ஊரக வளர்ச்சித் துறை திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மைக்கு, அதிகப்படியான நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், ஊரக வளர்ச்சித் துறைக்கு, நிதி மிக குறைவு.
குறிப்பாக, நகர்ப்புறங்களை ஒட்டிள்ள, 673 ஊராட்சிகளில், நகரங்களுக்கு இணையாக, திடக்கழிவுகள் உருவாகுகின்றன. இதை மேலாண்மை செய்ய, அந்த ஊராட்சிகள் திணறுகின்றன.
எனவே, அதற்கு தீர்வு காணும் விதமாக, ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும், தனது எல்லைக்குள் உருவாகும் கழிவுகளை தரம் பிரித்து, மறுசுழற்சி செய்யும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க முன் வந்துள்ளன.
அதன்படி, துாய்மை இயக்கம் மற்றும் ‘கிளீன் தமிழ்நாடு கம்பெனி’ வாயிலாக, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படுகிறது. முதல் கட்டமாக, சென்னை, திருவள்ளூர், மதுரை, கோவை, திருச்சி ஆகிய பெருநகரங்களை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சரிபார்க்கப்படும். அவை பலன் அளித்தால், மாநிலம் முழுதும் விரிவுப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
