ADDED : மார் 29, 2025 02:58 AM
சென்னை : ''அனைத்து மாவட்டங்களிலும், முதல்வர் இளைஞர் விளையாட்டு மைதானங்கள், 19 கோடி ரூபாயில் அமைக்கப்படும்,'' என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
சட்டசபையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், உதயநிதி வெளியிட்ட அறிவிப்புகள்:
சென்னை, மதுரையில், 24 நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை - 2025 போட்டிகள், 55 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்
முதல்வரின் இளைஞர் விளையாட்டுத் திருவிழா, தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில், 45 கோடி ரூபாயில் நடத்தப்படும்
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விளையாட்டு வளாகங்களில், இளம் விளையாட்டு வீரர்களை ஈர்க்கும், 'புட்சால், பாக்ஸ் கிரிக்கெட்' போன்ற விளையாட்டுகளுக்காக, முதல்வர் இளைஞர் விளையாட்டு மைதானங்கள், 19 கோடி ரூபாயில் அமைக்கப்படும். 25,000 விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கு காப்பீட்டு திட்டம் உருவாக்கப்படும்
திருவள்ளூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், பாரா விளையாட்டு மைதானங்கள், 7.5 கோடி ரூபாயில் அமைக்கப்படும்
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டங்களில் பயன் பெறும் வீரர்கள் எண்ணிக்கை, 100ல் இருந்து 200 ஆக உயர்த்தப்படும்
சேலம், ராமநாதபுரம் மாவட்டங்களில், சர்வதேச தரத்தில், செயற்கை தடகள ஓடுபாதையுடன், இயற்கை கால்பந்து புல்தரை மைதானம், 25 கோடி ரூபாயில் அமைக்கப் படும்
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு, சென்னையில் விளையாட்டு விடுதியும்; 40 சட்டசபை தொகுதிகளில், 120 கோடி ரூபாயில் சிறு விளையாட்டரங்கங்களும் அமைக்கப்படும்
சென்னையில் ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டியும், 'இ - ஸ்போர்ட்ஸ்' உலக சாம்பியன் போட்டியும் நடத்தப்படும்
தமிழகத்தில், ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி, ஆசிய இளையோர் படகோட்டுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படும்
தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் கருத்தரங்கம் நடத்தப்படும்
மாநிலம் முழுதும் உள்ள, 25 முதல்வர் சிறு விளையாட்டரங்கள், 15 கோடி ரூபாயில் மறுசீரமைத்து மேம்படுத்தப்படும்
தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில், இளைஞர் குழுக்கள் ஏற்படுத்தப்படும்
நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்களுக்கு, தொடர் செலவினமாக வழங்கப்படும் நிதி, ஒரு கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் அறிவித்தார்.