'சிப்காட்' தொழில் பூங்காக்களில் விளையாட்டு மைதானங்கள்
'சிப்காட்' தொழில் பூங்காக்களில் விளையாட்டு மைதானங்கள்
ADDED : டிச 21, 2024 07:54 PM
சென்னை:தொழிற்சாலை பணியாளர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலுப்பெற, ஸ்ரீபெரும்புதுார் உட்பட மூன்று தொழில் பூங்காக்களில், விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, ஒவ்வொரு பூங்காவிலும் தலா, 2 ஏக்கர் ஒதுக்கப்பட உள்ளது.
தமிழக அரசின், 'சிப்காட்' எனப்படும், தொழில் முன்னேற்ற நிறுவனம், 20 மாவட்டங்களில் ஏழு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உட்பட, 40 தொழில் பூங்காக்களை உருவாக்கியுள்ளது. அவற்றில் உள்ள, 3,275 தொழில் நிறுவனங்களில், எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.
பணியாளர்களை தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் தடுத்து, உடல் மற்றும் மன ரீதியாக வலுப்படுத்த, தொழில் பூங்காக்களில் விளையாட்டு மைதானங்களை அமைக்க, சிப்காட் முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில் மாம்பாக்கம், திருவள்ளூரில் கும்மிடிப்பூண்டி, துாத்துக்குடி ஆகிய மூன்று தொழில் பூங்காக்களில், 6 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதற்காக, ஒவ்வொரு பூங்காவிலும் தலா, 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்படுத்தப்படும். இந்த பூங்காக்களில், முதலாவதாக கைப்பந்து மைதானம் அமைக்கப்பட உள்ளது.
அதை தொழில் பூங்காக்களில் உள்ள ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். தொழில் நிறுவனங்கள் தங்களுக்குள் குழுக்களை ஏற்படுத்தி, மைதானங்களை பராமரிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.