நெல் எடையில் கொள்ளை லாபம்; டெல்டா விவசாயிகள் வேதனை
நெல் எடையில் கொள்ளை லாபம்; டெல்டா விவசாயிகள் வேதனை
ADDED : பிப் 18, 2024 07:17 AM

தஞ்சாவூர் : காவிரி டெல்டா மாவட்டங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லை விற்பனை செய்ய விவசாயிகளிடம் இருந்து ஒரு மூட்டைக்கு சுமார் 40 முதல் 50 ரூபாய் கறார் வசூல் நடந்து வருகிறது.
தற்போது, மாமூலை விட எடையில் பணியாளர்கள் கொள்ளை லாபம் பார்த்து வருவதால், விவசாயிகள் அதிருப்தியடைந்து வருகின்றனர்.
நசுவினி ஆறு படுக்கை அணை, விவசாயிகள் மேம்பாட்டு சங்கத் தலைவர் வீரசேனன் கூறியதாவது:
கொள்முதல் நிலையத்தில், சுமை துாக்கும் பணியாளர்கள் சம்பள பிரச்னையால் தான் மூட்டை எடையில் கை வைத்தனர். ஆனால், மூட்டைக்கு 10 ரூபாய் சம்பளம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நெல் மூட்டை எடையில் கூடுதலாக வைத்து, அதில் லாபம் பார்ப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஒரு மூட்டை 40 கிலோவுடன் 750 கிராம் சாக்கு எடையை சேர்ந்து, 40 கிலோ 750 கிராம் கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால், 42.5 கிலோ வரை கொள்முதல் செய்கின்றனர்.
உதாரணமாக ஒரு விவசாயி 400 மூட்டை நெல் விற்பனை செய்தால், மூட்டைக்கு, 1.5 கிலோ வீதம், 600 கிலோ எடையில் மோசடி செய்கின்றனர். அப்படி என்றால், விவசாயிக்கு குறைந்தபட்சம் 15 மூட்டை வீதம், 15,000 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
இதுபோக, தனியாக மாமூல் வழங்க வேண்டியுள்ளது. இதற்கு அரசு என்ன பதில் சொல்ல போகிறது. விவசாயிகளுக்கு தீர்வு எப்போது கிடைக்கும் என தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.