UPDATED : மார் 17, 2024 07:50 AM
ADDED : மார் 17, 2024 04:31 AM

கோவை : லோக்சபா தேர்தலையொட்டி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, நாளை (மார்ச் 18) கோவை வருகிறார். இதற்காக அவர், கர்நாடக மாநிலம், ஷிமோகா விமான நிலையத்தில் இருந்து மாலை, 4:35 மணிக்கு புறப்பட்டு, தனி விமானத்தில் கோவை விமான நிலையத்தை, 5:30 மணிக்கு வந்தடைகிறார்.
அங்கிருந்து, 5:35 மணிக்கு புறப்பட்டு சாலை மார்க்கமாக, 5:45 மணிக்கு ரோடு ஷோ துவங்கும் இடமான சாய்பாபா கோவில் கங்கா மருத்துவமனை பகுதியை வந்தடைகிறார்.
அங்கு துவங்கும் ரோடு ஷோ, 6:45 மணிக்கு ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் பகுதியில் நிறைவடைகிறது.
அங்கிருந்து, 6:50க்கு புறப்படும் பிரதமர், ரோடு வழியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகையை, 7:05 மணிக்கு அடைகிறார். அங்கு இரவு ஓய்வெடுக்கிறார்.
மறுநாள் காலை, 9:30 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, சாலை மார்க்கமாக, 9:40 மணிக்கு கோவை விமான நிலையத்தை சென்றடைகிறார்.
விமான நிலையத்தில் இருந்து, 9:45 மணிக்கு புறப்பட்டு ஹெலிகாப்டரில், 10:15 மணிக்கு கேரள மாநிலம், பாலக்காட்டை சென்றடைகிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி, விமான நிலையத்தில் இருந்து, ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை, 5,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
நேற்று, பிரதமரின் தனி பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள், ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, மாநகர போலீஸ் உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகளும் பிரதமர் மோடி வந்து செல்லும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
பிரதமர் மோடி இரவு தங்க உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் வாகனங்களை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.
அரசு விருந்தினர் மாளிகை பகுதி முழுதும், போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை மாநகரம் முழுதும், பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேட்டுப் பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம், எரு கம்பெனி முதல் ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் வரை சுமார், 3.3 கி.மீ., துாரம் நடக்கவிருந்த, பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி பாதுகாப்பு காரணங்களால், 2 கி.மீ., ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கவுண்டம்பாளையம், எரு கம்பெனியில் துவங்க இருந்த ரோடு ஷோ, சாய்பாபா கோவில் அருகே துவங்க உள்ளது.

