பிரதமர் மோடியின் தமிழ் பேச்சு: திராவிட கட்சிகளுக்கு தூக்கம் போச்சு?
பிரதமர் மோடியின் தமிழ் பேச்சு: திராவிட கட்சிகளுக்கு தூக்கம் போச்சு?
UPDATED : ஜன 13, 2024 04:21 PM
ADDED : ஜன 03, 2024 02:24 PM

பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க திருச்சிக்கு வந்த பிரதமர் மோடியின் தமிழ் மற்றும் தமிழர் பற்றிய பேச்சு, திராவிட கட்சியினருக்கு தூக்கத்தை தொலைக்க வைத்துள்ளது.
தமிழ் மொழி, தமிழர், தமிழகம் என்றாலே நாங்கள் மட்டும்தான் என்று மொத்த குத்தகைக்கு எடுத்தது போல் திராவிட தலைவர்கள் எப்போதும் பேசுவது வழக்கம்.
தமிழ் பற்றியும் தமிழர் பற்றியும் வேறு யாரையும் பேசவும் விட மாட்டார்கள். ஆனால் அவர்களின் எண்ணத்தை பிரதமர் மோடி புண்ணாக்கிவிட்டார். திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழாவில் மோடி பேசிய பேச்சு, பாஜ., வுக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது.
நேற்று அந்த விழாவில் பேசிய மோடி எடுத்த எடுப்பிலேயே 'வணக்கம்... தமிழ் குடும்பங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்' என்று பேச்சை ஆரம்பித்தார். அதைக் கேட்டு அங்கு கூடியிருந்த கூட்டம் ஆரவாரம் செய்தது. மேடையில் அமர்ந்திருந்த முதல்வர் ஸ்டாலின் லேசாக சிரித்துக்கொண்டார்.
ஆரம்பத்திலேயே கூட்டத்தை தன் வயப்படுத்துவார் மோடி என்று முதல்வர் எதிர்பார்க்கவில்லை. அதோடு விட்டாரா பிரதமர், பேச்சுக்குப் பேச்சு அடிக்கடி, 'என் குடும்ப உறவுகளே, சொந்தங்களே, எனது தமிழ் குடும்பமே' என்று தெறிக்க விட்டார்.
'இது நமது பாணியாச்சே; பிரதமர் இப்படி நமது ஆயுதத்தை கையில் எடுத்து விட்டாரே. தமிழை சொல்லித்தானே ஓட்டு வாங்குகிறோம். அதற்கும் இந்த மனிதர் ஆப்பு வைத்து விட்டாரே' என்ற அதிர்ச்சியில் அங்கு கூடியிருந்த திமுகவினர் ஆணி அடித்தது போல் அமர்ந்திருந்தனர்.
'தமிழ் உங்களுக்கு மட்டுமா சொந்தம் எங்களுக்கும் அது சொந்தம் தானே' என்று மோடி சொல்லாமல் சொல்லியது, திராவிட கொள்கையாளர்களை கிள்ளாமல் கிள்ளியது. முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதியின் ஸ்டைல் அங்கு பரிதாபமாக சிதறியது.
'தமிழ், தமிழர் என்று பேசினால் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்து விடலாம்' என்ற எளிய பார்முலா, அங்கு ஈசியாக கடைவிரிக்கப்பட்டது.
தமிழின் ஹோல்சேல் வியாபாரிகள் அங்கு சில்லரை வியாபாரிகளாக சிதறிப் போனார்கள். மாற்றுக் கட்சியினரோ 'நாங்களும் உங்களைப் போல் பேசுவோம்ல' என சிலிர்த்துப் போனார்கள்.
அதுமட்டுமா, மாணவர்களிடம் பேசிய மோடி 'எனது மாணவக் குடும்பமே' என்று தமிழில் அடிக்கடி குறிப்பிட்டு திராவிட கட்சிகளின் அடிவயிற்றில் நெருப்பை வைத்தார்.
மோடியின் இந்த ஸ்டைலுக்கு மாணவர்கள் கரகோஷம் செய்தனர். இந்த கரகோஷம் சில திராவிட தலைவர்களின் காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது.
முன்பெல்லாம் தமிழ் பற்றி பலமுறை மோடி பேசியிருந்தாலும் இம்முறை அவர் தமிழர்கள், தமிழ் குடும்பங்கள் என பேச்சுக்கு பேச்சு குறிப்பிட்டு தன்னையும் தமிழர்களில் ஒருவராக காட்டிக் கொண்டார்.
இது மோடியின் முந்தைய பேச்சிலிருந்து நிறைய மாறுபட்டது. மோடியின் இந்த புதிய அணுகுமுறை தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று திராவிட கட்சிகளை புலம்ப வைத்தது. இந்த தாக்கம் இருக்குமா என வரும் தேர்தலில் தெரிந்து விடும்.