தி.மு.க., அரசு வாங்கிய கடனில் ரூ.2.20 லட்சம் கோடி வீண் பா.ம.க., தலைவர் அன்புமணி ஆவேசம்
தி.மு.க., அரசு வாங்கிய கடனில் ரூ.2.20 லட்சம் கோடி வீண் பா.ம.க., தலைவர் அன்புமணி ஆவேசம்
ADDED : ஜன 02, 2026 02:04 AM

சென்னை: தி.மு.க., அரசு வாங்கிய கடனில், 2.20 லட்சம் கோடி ரூபாயை வீணாக செலவிட்டுள்ளதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த நான்காண்டுகளில், தி.மு.க., அரசு வாங்கிய கடன், 3 லட்சத்து, 86,797 கோடி ரூபாய். அதில், 1 லட்சத்து 66,754 கோடி ரூபாயை மட்டுமே, மூலதன செலவு செய்துள்ளது.
கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவே கடன் வாங்கியதாக, தி.மு.க., அரசு கட்டமைத்த பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது.
தி.மு.க., அரசு வாங்கிய கடனில், 43.11 சதவீதம் மட்டுமே, கட்டமைப்புகளை ஏற்படுத்த செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள, 2.20 லட்சம் கோடி ரூபாய் கடனை, தி.மு.க., அரசு வீணாக செலவிட்டுள்ளது. அரசு ஊழியர் சம்பளம், இலவச திட்டங்களுக்கு கூட, கடன் வாங்கியுள்ளது.
கடந்த நான்காண்டுகளில், உத்தர பிரதேசத்தை விட, 50 சதவீதம் அதிகமான கடனை தமிழகம் வாங்கியுள்ளது. ஆனால், உபி., அரசு, 4.65 லட்சம் கோடி ரூபாயை உட்கட்டமைப்பு வசதிகளுக்கு செலவிட்டுள்ளது. அதாவது, வாங்கிய கடனை விட, 2.08 லட்சம் கோடி ரூபாய் அதிகமாக செலவிட்டுள்ளது.
கடந்த நான்காண்டுகளில், உ.பி., அரசு, செலவுகளைக் கட்டுப்படுத்தி, 2.15 லட்சம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தி, வருவாய் உபரியை ஏற்படுத்தியதே இதற்கு காரணம்.
நிதி நிர்வாகம் குறித்து, உ.பி., அரசிடம் பாடம் கற்க வேண்டிய நிலையில் இருக்கும் தி.மு.க., அரசு, தமிழக வரிப்பணம், உ.பி.,க்கு செல்வதாக, அடிமுட்டாள்தனமான பொய்யை கூறி வருகிறது.
கடனுக்காக, தி.மு.க., அரசு செலுத்திய வட்டி தொகையில், தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும், தலா 2 லட்சம் ரூபாய் வழங்க முடியும்.
ஆனால், ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும், 6 லட்சம் ரூபாயை தி.மு.க., அரசு கடன் வாங்கியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

